முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 20 லீக் ஆட்டம்: கெய்ல், கோலி அதிரடியால் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

ராஜ்கோட் : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி கெய்ல், விராட் கோலி ஆகியோரின் அதிரடி அரைசதத்தால் இந்த சீசனில் 2-வது வெற்றியை பெற்றது.

8 அணிகள்

8 அணிகள் இடையிலான 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

20-வது லீக் ஆட்டம்

இந்த நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய 20-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், குஜராத் லயன்சும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு அணியில் மீண்டும் முதுகுவலியால் அவதிப்படும் டிவில்லியர்ஸ் மற்றும் பத்ரீ நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கிறிஸ் கெய்ல், டிராவிஸ் ஹெட் திரும்பினர். குஜராத் அணியில் மூன்று மாற்றமாக ஜாசன் ராய், முனாப் பட்டேல், பிரவீன்குமார் ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டனர்.

கெய்ல் அதிரடி

‘டாஸ்’ ஜெயித்த குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.  முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், கேப்டன் விராட் கோலியும் களம் இறங்கினர். தவால் குல்கர்னியின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து கேப்டன் விராட் கோலி அதிரடிக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்டார்.

சிக்சர் மழை

அதைத் தொடர்ந்து கிறிஸ் கெய்லின் பேட், ராக்கெட் வேகத்தில் சுழல ஆரம்பித்தது. முந்தைய தடுமாற்றத்திற்கு ஒட்டுமொத்தமாக விடைகொடுத்த அவர் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை கதறடித்த அவர் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விசுவரூபம் எடுத்த கெய்ல், சிக்சருடன் நடப்பு தொடரில் முதல் அரைசதத்தை கடந்தார்.
முதலில் ஆக்ரோஷமாக ஆடிய விராட் கோலி, அதன் பிறகு கெய்லுக்கு வாய்ப்பு அளித்து விட்டு எதிர்முனையில் நின்று ரசிக்க தொடங்கி விட்டார். வெய்ன் சுமித்தின் ஓவரிலும் கெய்ல் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார்.

கோலி அரை சதம்

குஜராத் பந்து வீச்சாளர்களை வெளுத்து கட்டிய இந்த ஜோடி ஸ்கோர் 122 ரன்களை (12.4 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. கெய்ல் 77 ரன்களில் (38 பந்து, 5 பவுண்டரி, 7 சிக்சர்) பாசில் தம்பியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். இதன் பின்னர் தனது 28-வது ஐ.பி.எல். அரைசதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி 64 ரன்களில் (50 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.
அடுத்து டிராவிஸ் ஹெட்டும், கேதர் ஜாதவும் கைகோர்த்து தொடக்க ஜோடி விட்டுக்சென்ற பணியை செவ்வனே செய்து முடித்தனர். இவர்களும் வாணவேடிக்கை காட்ட தவறவில்லை. அதன் மூலம் அணி 200 ரன்களை சுலபமாக கடந்தது.

213 ரன் இலக்கு

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 30 ரன்களுடனும் (16 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேதர் ஜாதவ் 38 ரன்களுடனும் (16 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்த சீசனில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் இது தான்.
பின்னர் ஆடிய குஜராத் அணியும், பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் ரன்வேட்டைக்கு குறை வைக்கவில்லை. ஒரு பக்கம் வெய்ன் சுமித் (1 ரன்), கேப்டன் சுரேஷ் ரெய்னா (23 ரன்), ஆரோன் பிஞ்ச் (19 ரன்), தினேஷ் கார்த்திக் (1 ரன்) ஆகியோர் வரிசையாக வெளியேறினாலும், மறுபுறம் பிரன்டன் மெக்கல்லம், பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஆனால் மெக்கல்லம் (72 ரன், 44 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்) வீழ்ந்ததும் குஜராத்தின் நம்பிக்கை தகர்ந்து போனது.

பெங்களூரு வெற்றி

இறுதி கட்டத்தில் இஷான் கிஷன் (39 ரன், 16 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) போராடிய போதிலும் அது ரன் வித்தியாசத்தை குறைக்க உதவியதே தவிர, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லவில்லை. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணியால் 7 விக்கெட்டுக்கு 192 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணிக்கு இது 2-வது வெற்றியாகும். குஜராத்துக்கு விழுந்த 4-வது அடியாகும்.

இலக்கு கடினமானதே: ரெய்னா

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி தோல்வியில் இருந்து மீண்டு குஜராத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
ராஜ்கோட் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன் குவித்தது. கிறிஸ் கெய்ல் 38 பந்தில் 77 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), விராட் கோலி 50 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), கேதர் ஜாதவ் 16 பந்தில் 38 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். பின்னர் விளையாடிய குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி குறித்து கோலி ...

மெக்கல்லம் 44 பந்தில் 72 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), இஷாந் கிசான் 16 பந்தில் 39 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் ரெய்னா 8 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். யசுவேந்திர சஹால் 3 விக்கெட் வீழ்த்தினார். பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து 2-வது வெற்றியை ருசித்தது. இந்த வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கிறிஸ் கெய்ல் அபாரமாக விளையாடினார். நாங்கள் எதிர்பார்த்ததைவிட 30 ரன்கள் அதிகமாகவே எடுத்துவிட்டோம். பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. வெற்றி நீடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து ரெய்னா ...

குஜராத் லயன்ஸ் அணி 4-வது தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் ரெய்னா கூறியதாவது:-

நாங்கள் சிறப்பாகவே பேட்டிங் செய்தோம். 200 ரன் என்பது எடுக்க கூடிய இலக்கு தான். 200 ரன்னுக்கு மேல் இலக்கு என்பது கடினமாதே. எங்களது பவுலர்கள் கூடுதலாக ரன்களை கொடுத்து விட்டனர். பந்துவீச்சு குறித்து மிகுந்த கவலை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெங்களூர் அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை 23-ம் தேதியும், குஜராத் அணி நாளை கொல்கத்தாவையும் சந்திக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்