கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 19 ஏப்ரல் 2017      கடலூர்

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ்,  தலைமையில்  கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலெக்டர்  கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1க்கு 22 மையங்களில் 9933 தேர்வர்களும், தாள்-2க்கு 46 தேர்வு மையங்களில் 22145 தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர் எனவும், ஆசிரியர் தகுதி தேர்விற்கான வினாத்தாள் கட்டு காப்பு மையம், தேர்விற்கான வினாத்தாள்களை தேர்வு நாளன்று தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் வழித்தடங்கள் ஆகியவற்றில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேர்வு மையங்களில் தேர்வர்களை பரிசோதிப்பதற்கு கல்வித்துறை அதிகாரிகளுடன் போதுமான காவலர்களை நியமிக்குமாறும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அறை கண்காணிப்பாளர்கள் தங்களுடைய பணியில் எந்தவித குந்தகமும் ஏற்படாத வண்ணம் செயல்படுமாறும், தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி போதுமான அளவில் ஏற்படுத்துமாறும், தேர்வு மையங்களுக்கு அருகில் மைக் மற்றும் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.ஆசிரியர் தகுதி தேர்வின்போது தவறான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் இத்தேர்வு தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல போதுமான அளவு பேருந்து வசதிகளை ஏற்படுத்துமாறும் போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முரளிதரன், காவல் துணை கண்காணிப்பாளர் (சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு) கணேசன், கடலூர் (ஆயுதப்படை) காவல் துறை துணை கண்காணிப்பாளர் கே.சிவசங்கரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் கே.குமாரசாமி, ஜி.கோமதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எஸ்.மதிவாணன், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் கு.பிச்சையப்பன், கடலூர் மின் பகிர்மானக் கோட்ட  உதவி செயற்பொறியாளர்  ஆர்.மஞ்சுளா மற்றும் கல்வித்துறை அலுவலர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: