முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21-வது லீக் ஆட்டம்: டெல்லி டேர்டெவில்சை வீழ்த்தி ஐதராபாத் அணி 4-வது வெற்றி

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத்  - ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 21-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் சன் ரைசர்ஸ் 4-வது வெற்றியை பதிவு செய்தது.

8 அணிகள்
8 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.

முகமது சிராஜ் அறிமுகம்
இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்சை எதிர்கொண்டது. ஐதராபாத் அணியில் பரிந்தர் ஸ்ரன் நீக்கப்பட்டு, ரூ.2.6 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அறிமுகம் ஆனார். இதே போல் முகமது நபி கழற்றிவிடப்பட்டு அவரது இடத்தில் கனே வில்லியம்சன் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் ஒரே ஒரு மாற்றமாக முகமது ஷமிக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம் பெற்றார்.

தவான் அரைசதம்
‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி வார்னரும், ஷிகர் தவானும் ஐதராபாத்தின் இன்னிங்சை தொடங்கினர். அதிரடி சூரர் வார்னர் 4 ரன்னில் (7 பந்து) கேட்ச் ஆனார். ஐ.பி.எல்.-ல் கடைசி 17 இன்னிங்சில் வார்னர் ஒற்றை இலக்கில் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

வில்லியம்சன் அதிரடி
இதன் பின்னர் ஷிகர் தவானுடன், கனே வில்லியம்சன் இணைந்தார். தவான் சற்று மெதுவாக ஆடினாலும் வில்லியம்சன், எதிரணி பந்து வீச்சை வெளுத்து கட்டினார். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மேத்யூஸ், அமித் மிஸ்ராவின் ஓவர்களில் தலா 2 சிக்சர்களை வில்லியம்சன் பறக்க விட்டார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் திரட்டியது. வில்லியம்சன் 89 ரன்களில் (51 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டம் இழந்தார். தவான் தனது பங்குக்கு 70 ரன்கள் (50 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். இவர்களுக்கு பிறகு வந்த யுவராஜ்சிங் (3 ரன்) ‘யார்க்கர்’ பந்தில் கிளன் போல்டு ஆனார்.

192  ரன்கள் இலக்கு
20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. ஹென்ரிக்ஸ் 12 ரன்னுடனும், தீபக் ஹூடா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் 4 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் கைப்பற்றினார். அடுத்து 192 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. சாம் பில்லிங்ஸ் 13 ரன்னிலும், கருண் நாயர் 33 ரன்களிலும், ரிஷாப் பான்ட் ரன் ஏதுமின்றியும், சஞ்சு சாம்சன் 42 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

ஐதராபாத் வெற்றி
இதன் பின்னர் ஸ்ரேயாஸ் அய்யரும், மேத்யூசும் இணைந்து தங்கள் அணியை கரைசேர்க்க முயற்சித்தனர். கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் வீசினார். அவர் மேத்யூசின் (31 ரன்) விக்கெட்டை சாய்த்து 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார்.
20 ஓவர்களில் டெல்லி அணியால் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களுடன் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். இதன் மூலம் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் 4-வது வெற்றியை ருசித்தது. இந்த 4 வெற்றிகளும் அந்த அணிக்கு உள்ளூர் மைதானத்திலேயே கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது 3-வது தோல்வியாகும்.

கடைசி ஓவரில் கூடுதல் ரன்: ஜாகீர்கான்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் கூடுதலாக ரன்னை கொடுத்து விட்டேன் என்று டெல்லி கேப்டன் ஜாகீர்கான் தெரிவித்தார்.

4-வது வெற்றி
ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நடப்பு சாம்பியன் சன்ரைசஸ் ஐதராபாத் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. வில்லியம்சன் 51 பந்தில் 89 ரன்னும் (6 பவுண்டரி, 5 சிக்சர்), தவான் 50 பந்தில் 70 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

ஐதராபாத் வெற்றி
பின்னர் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இதனால் 15 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் அய்யர் 31 பந்தில் 50 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), சாம்சன் 33 பந்தில் 42 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), கருண் நாயர் 23 பந்தில் 33 ரன்னும் எடுத்தனர். முகமது சிராஜ் 2 விக்கெட்டும், கவுல், யுவராஜ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் சன்ரைசஸ் ஐதராபாத் 2-வது இடத்துக்கு முன்னேறியது.

வெற்றி குறித்து வார்னர்
எங்கள் அணி வீரர்களின் ஆட்டம் அபாராமாக இருந்தது. வில்லியம்சன் முதல் ஆட்டத்திலேயே திறமையை வெளிப்படுத்தினார். அவரும், தவானும் இணைந்து அணி நல்ல ஸ்கோர் அமைய காரணமாக திகழ்ந்தனர். எங்களது பந்து வீச்சும் சிறப்பாக இருந்தது. வேகப்பந்து வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள். புவனேஸ்வர் குமார் மீண்டும் ஒருமுறை தனது பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தோல்வி குறித்து ஜாகீர்கான்
180 ரன் என்பது எடுக்கக் கூடிய இலக்கு. 192 ரன் என்பது கடினமானதே. நான் வீசிய கடைசி ஓவரில் ரன்களை வாரி கொடுத்து விட்டேன். ஆனாலும் எங்கள் அணி வீரர்கள் இலக்கை நோக்கி சிறப்பாகவே ஆடினார்கள். துரதிருஷ்டவசமாக ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியாமல் போனது. புவனேஸ்குமார் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி ஐதராபாத் வெற்றிக்கு மிகவும் உதவியாக இருந்தார். கருண் நாயரின் ரன் அவுட் ஆட்டத்தை மாற்றி விட்டது. ஒட்டு மொத்தமாக நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். குறைந்த அளவு ரன்னில்தான் தோற்றுள்ளோம்.
இவ்வாறு ஜாகீர்கான் கூறியுள்ளார். டெல்லி அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.  ஐதராபாத் அணி 7-வது ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்டை 22-ம் தேதியும், டெல்லி அணி 6-வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை அதே தினத்திலும் சந்திக்க உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago