தமிழக சுற்றுச்சூழல்துறையின் தகவல் மையத்திற்கு மத்திய அரசு விருது

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      தமிழகம்
Environment award(N)

சென்னை  - தமிழகசுற்றுச்சூழல் துறையின் தகவல் மையத்திற்கு, 2015-16-ம் ஆண்டிற்கான நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற விருதினை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கான விருதினை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தகவல் மையம்
தமிழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் தொடர்புடைய பல்வேறு தகவல்களை இம்மையம் வழங்கிவருகிறது. தகவல்கள் சேகரித்தல், ஒப்பிடுதல், சேமித்தல், சீர்படுத்துதல் மற்றும் வலைதளத்தின் மூலம் சுற்றுச்சூழல் தகவல்களைப் பரப்புதல் ஆகியவற்றில் இம்மையம் ஈடுபட்டுள்ளது. செய்திமடல் வெளியிடுதல், வலைதளம் சார்ந்த தகவல் தொகுப்புகளை உருவாக்குதல், சுற்றுச்சூழல் தொடர்பான வினாக்களுக்கு விடையளித்தல் போன்றவை இம்மையத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

தகவல் விருது
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவ கால மாற்ற  அமைச்சகம் இம்மையங்களின் செயல்பாடுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில், தனி வல்லுநர்கள் மூலமும், வலைதளம் மூலமும், நேரடி ஆய்வுகள் மற்றும் சரிபார்ப்புகள் மூலமும் மையங்களின் நடவடிக்கைகளை மதிப்பீடுகள் செய்து, ஒருங்கிணைந்த மதிப்பெண்கள் அடிப்படையில் மிகச்சிறந்த, சிறந்த, செயல்படாத, மையங்கள் என மதிப்பீடு செய்கிறது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மிகச்சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என மதிப்பீடு செய்யப்படும் மையங்களுக்கு நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற விருதும் மையத்தினை மேம்பாடு செய்ய ரூபாய் ஒரு லட்சமும் வழங்கி வருகிறது.


சுற்றுச்சூழல் துறை
நமது நாட்டில் 69 சுற்றுச்சூழல் தகவல் மையங்கள் பல்வேறு பகுதிகளில் இயங்கிவருகின்றன. தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும். சுற்றுச்சூழல் தகவல் மையம் கடந்த மூன்றாண்டுகளில், 2013-14, 2014-15 மற்றும் 2015-16 முறையே 81, 88 மற்றும் 93 மதிப்பெண்கள் பெற்றதனைத் தொடர்ந்து, தமிழக சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தகவல் மையத்திற்கு, 2015-16 ஆம் ஆண்டிற்கான நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற விருதினையும், மையத்தினை மேம்பாடு செய்ய 1 லட்சம் ரூபாயினையும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவ கால மாற்ற அமைச்சகம் குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற தேசிய மதிப்பீடு கருத்துப் பட்டறையின் போது வழங்கியது.

முதல்வரிடம் வாழ்த்து
மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவ கால மாற்ற அமைச்சகம் வழங்கிய விருதினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமைச் செயலத்தில் முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுத்தின், சுற்றுச்சூழல் துறை இயக்குநர் முனைவர் எச்.மல்லேசப்பா, சுற்றுச்சுழல் துறை கூடுதல் இயக்குநர் ஜெயந்தி முரளி மற்றும் சுற்றுச்சூழல் தகவல்மையத்தின் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: