முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவகாரம்:: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் தற்போது உள்ள நிலையே தொடர வழிவகை செய்யும், தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு விரைவாக ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற்தியுள்ளார். மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பு, பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் பல்மருத்துவ மேல்படிப்பு ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை (நீட்) நடத்தி அதன் மூலம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய முறையை வரும் ஆண்டில் இருந்து அமுல்படுத்த உள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதனால் நகர்ப்புற மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் வலியுறுத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக தமிழக சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த 2 மசோதாக்களுக்கும் இன்னும் அனுமதி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கப்படாமல் இருக்கிறது. ஆனால் மருத்துவக்கல்லூரிகளுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கான காலக்கெடு நெருங்கிக்கொண்டியிருக்கிறது. இதனால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் விரைந்து கிடைக்க செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

மசோதாக்கள் நிறைவேற்றம்
அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு பல்மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பல்மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கு தமிழகத்தில் பின்பற்றப்பட்ட அதே நிலை நீடிக்க வகை செய்யும்படி சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள் கவர்னர் மூலம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  இந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்துவிட்டால் தமிழகத்தில் வழக்கம்போல் அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் அரசு பல்மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நியாயமாகவும்,வெளிப்படையாகவும் நடக்க உதவும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

நல்ல மருத்துவ வசதி
தற்போதுள்ளபடி மருத்துவக்கல்லூரிகள் மற்றும் பல்மருத்துவ கல்லூரிகளில்  மருத்துவ பட்டமேற்படிப்புக்கு மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களை தேர்வு மற்றும் அனுபவம் ரீதியாக நிரப்பப்பட்டு வருகிறது. அதாவது இந்த 50 சதவீதத்தில் பாதி அளவுக்கு பணி அனுபவம்  அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. மீதமுள்ள பாதி அளவுக்கு மருத்துவ பட்டப்படிப்பை முடித்துவிட்டு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை செய்தவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு அட்மிஷன் கொடுக்கப்படுகிறது. இதனால் கிராமப்புறம் மற்றும் மலைஜாதியினர்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்கிறது.

நீட் தேர்வு அமல்
இந்தநிலையில் நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர தேசிய அளவில் ஒரு பொதுத்தேர்வை  (நீட்) மத்திய கொண்டு வரும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956, மறறும் பல் மருத்துவ சட்டம் 1948 ஆகியவற்றில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 50 சதவீத இடங்களிலும் நீட் தேர்வு மூலமே நிரப்ப வேண்டும் என்றும் அந்த திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அரசு மேல்முறையீடு
நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை விபரம் குறித்து வெளியிட்டுள்ள விபர தொகுப்பில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது நீட் தேர்வு அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது இந்திய மருத்துவ கவுன்சில் முதுகலை மருத்துவ   படிப்புக்கான 2000 -ம் ஆண்டு சட்டத்தில்  2017 மார்ச் 31-ம் தேதி வரை  இருக்கும் விதிமுறைகளுக்கு முரண்பாடாக உள்ளது. இதனால் கிராமப்புற மக்களுக்கும், தொலைதூரத்தில் வசிக்கும் மக்களுக்கும் மருத்தவ வசதி கிடைக்காமல் போகும். மேலும் அரசு பணியில் உள்ள டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டின் ஒரு நீதிபதியை கொண்ட பெஞ்ச் பிறப்பித்துள்ள 2 உத்தரவில் இந்திய மருத்துவ கவுன்சிலின் 2000-ம் ஆண்டின் விதிமுறைகள் படிதான் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பில் அட்மிஷன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த 2 உத்தரவுகளையும் எதிர்த்து தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்ய உள்ளது.

தற்போதுள்ள நிலையே ...
கிராமப்புற மாணவர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்க தமிழகத்தில் 'நீட்' தேர்வை தவிர்ப்பது அவசியமாகும். அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் பட்டமேற்படிப்பு சேர்க்கையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. அதனால் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது மாநில அரசின் ஒதுக்கீட்டின்படி இருக்க சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த 2 மசோதாக்களுக்கும் விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும். முதுநிலை மருத்துவ படிப்புக்கான மத்திய அரசின் நீட் வழிகாட்டுதலில் நீட் தேர்வை தவிர மாநில அரசின் கொள்கையில் தலையிட மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது பின்பற்றப்படவில்லை. தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 2 மசோதாக்களில் கூறப்பட்டுள்ளபடி மாநில அரசின் கொள்கைகளை இணைக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலின் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

பெரிதும் பாதிப்பு
மருத்துவ இளம்நிலை வகுப்புகளில் நீட் தேர்வு அடிப்படையில் அட்மிஷன் கொடுத்தால் மாநில தேர்வு வாரியம் மூலம் மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களில் 98 சதவீதம் பேர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள மசோதாவில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மற்றும் இதர ஆதாரங்கள் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக தகுதி உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கட்டாயத்தால் இந்தாண்டு அட்மிஷன் கிடைக்காமல்  பெரிதும் பாதிப்புக்குள்ளாகுவார்கள். இதனால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார உரிமை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் மாணவர்களிடத்தில் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ஒப்புதல் ...
இந்த அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ மேற்படிப்பு பல் மருத்துவ மேல்படிப்புக்கான 2017-ம் ஆண்டு மசோதாவுக்கும் தமிழ்நாடு மருத்து கல்லூரி பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ மேல்படிப்புக்கான மசோதா 2017-க்கும் விரைந்து ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago