ஷாகித் அப்ரிடிக்கு இந்திய வீரர்கள் கையொப்பமிட்டு வழங்கிய ஜெர்சி

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      விளையாட்டு
Shahit afridi 2017 4 20

புதுடெல்லி : சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற ஷாகித் அப்ரிடிக்கு, இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்டு வழங்கிய விராட் கோலி ஜெர்சியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலக சாதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் களம் இறங்கினார். சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது ஆட்டத்திலேயே இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தது உலக சாதனை படைத்திருந்தார். இந்த சாதனை 19 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமலேயே இருந்தது குறிப்பிடத்தக்து.

போட்டியில் ஓய்வு


பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஷாகித் அப்ரிடி ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்றார். முன்னதாக பாகிஸ்தான் அணிக்காக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற  டி20 உலக கோப்பை போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.  டி20 உலக கோப்பை தொடர் நிறைவுற்றதும் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த ஷாகித் அப்ரிடி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தார்.

97 விக்கெட்டுகள்

27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாகித் அப்ரிடி 1176 ரன்களை குவித்துள்ளார், அதிகபட்சமாக 156 ரன்களையும் 48 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளில் 8064 ரன்களை குவித்துள்ள ஷாகித் அப்ரிடி அதிகபட்சமாக 124 ரன்களையும், 395 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். சர்வதேச அரங்கில் டி-20 போட்டிகளை பொருத்த வரை 98 போட்டிகளில் களம் கண்ட ஷாகித் அப்ரிடி 1405 ரன்களையும் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ஜெர்சி பரிசு

தற்போது ஷாகித் அப்ரிடி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது.  இந்நிலையில், இந்திய வீரர்கள் விராட் கோலி, யுவராஜ் சிங், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, ரெய்னா, நெகி, முகமது ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரகானே, தவான் உள்பட பல்வேறு இந்திய அணி வீரர்கள் கையொப்பமிட்ட விராட் கோலி ஜெர்சியை அப்ரிடிக்கு பரிசாக வழங்கினார்கள்.

கோலி வாழ்த்து

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஜெர்சியில் கையொப்பமிட்ட நினைவு பரிசை அப்ரிடிக்கு வழங்கியது குறித்து விராட் கோலி கூறியதாவது, "ஷாகித் பாய் வாழ்த்துக்கள், உங்களுக்கு எதிராக விளையாடியது எப்போதும் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்". இத்துடன் இந்திய வீரர்கள் வழங்கிய ஜெர்சியில் இதே வாசகம் எழுதப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தூதராக நியமனம்

சமீபத்தில் இந்திய வீரர்கள் வழங்கிய ஜெர்சியின் புகைப்படத்தை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். இங்கிலாந்தில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான தூதராக ஷாகித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வாடகை ரோபோ

மூட்டு வலியால் அவதிப்படும் முதியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், ரோபோ கால் ஒன்று ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. டொயட்டோ மோட்டார் நிறுவனம் உருவாக்கியுள்ள வெல்வாக்ஸ் என்ற இந்த ரோபோ, பக்கவாதம், மூட்டு வலியால் தவிக்கும் நோயாளிகள் எளிதில் நடப்பதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ காலுடன், ஒரு டிரெட்மில், ஒரு கண்காணிக்கும் கருவியும் வழங்கப்படுகிறது. இந்த ரோபோ, வயதானவர்களுக்கு டிரெட்மில்லில் நடைப்பயிற்சி வழங்குகிறது. யாருடைய உதவியும் இல்லாமல், வயதானவர்கள் மற்றும் கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக நடப்பதற்கு இந்த ரோபோ கால் உதவும். இந்த ரோபோ கால், முதற்கட்டமாக வாடகைக்கு விடப்படுகிறது. மாத வாடகைத் தொகை, 2 லட்சம் ரூபாயாம்.

சுற்றுலாவில்...

2016-ம் ஆண்டுக்கான உலகளவில் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தாண்டு ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தாண்டு 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா இந்த பட்டியலில் 40 வது இடத்தில் உள்ளது.

வெப்பமான மார்ச்

உலகில் 6 ஆயிரத்து 300 இடங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்க‌ளின் அடிப்படையில், கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2-வது மாதமாக க‌டந்த மார்ச் மாதம் நாசாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ‌2016ம் ஆண்டு மார்ச்சில் அதிக வெப்பம் பதிவாகியிருந்தது.

ஸ்குவாட்ஸ் பயிற்சி

ஸ்குவாட்ஸ் பயிற்சியைச் செய்வதால், முழு உடலுக்கும் வலு கூடுகிறது. கொழுப்பைக் குறைத்து தொடை, பின்புறம் மற்றும் வயிற்றுப் பகுதிகளை உறுதியாக்குகிறது.தொடை வலுவாக இருந்தால்தான் உடலைத் தாங்கிப்பிடிக்க முடியும். இந்தப் பயிற்சி செய்வதன் மூலம் தொடைப் பகுதி நன்றாக வலுப்படும்.

உற்ற நண்பன்

மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள ரோபோ முதியோர், நோயாளிகளுக்கு உதவும் விதமாக லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் உள்ள இந்த ரோபோ முதியவர்கள், நோயாளிகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு பேச்சுத் துணையாக செயல்படுகிறது.

ஏரோமொபில்

விரைவில் அறிமுகமாகவுள்ள ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. 5 அடி நீளம் கொண்ட இந்தப் பறக்கும் காரில், இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கலாம். சாலையில் செல்லும்போது 310 மைல்கள் வரை பயணிக்குமாம்.

117-ல் மரணம்

1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த இத்தாலியைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணியாக கருதப்பட்டு வந்த எம்மா மொரானோ காலமானார். அவருக்கு வயது 117.  21-வது நூற்றாண்டுவரை வாழ்ந்த இவர், 19-வது நூற்றாண்டில் பிறந்து உயிருடன் வாழ்ந்த கடைசி நபர் என்ற பெருமையை பெற்றவர்.

பிளாஸ்டிக் ரோபோ

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையைச் சேர்ந்த ரிஷிகுமார் என்ற 14 வயது மாணவன் பிளாஸ்டிக் ரோபோ ஒன்றையும் உருவாகியுள்ளார். பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்ட இந்த ‌ரோபோ, குரல் உத்த‌ரவுக்குப் பணிந்து பாடுவது, நடனமாடுவது போன்றவற்றை செய்கிறது. இந்திய ராணுவத்தில் ரோபோவின் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியமாக கொண்ட இந்த மாணவர் , கடந்த 2 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான மொபைல் ஆப்ஸை உருவாக்கியுள்ளார். அவற்றை பல நிறுவனங்களுக்கு விற்பனையும் செய்திருக்கிறார். தற்போது 50 கிராம் எடை கொண்ட கணினி சிபியு-வை உருவாக்கியுள்ளார்.

டோர் டெலிவரி

உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்பிள் ரோபோ நிறுவனமும் இணைந்து தானியங்கி ரோபோக்களை வடிவமைத்துள்ளனர். சாப்பாடு ஆர்டர் செய்தால் இந்த ரோபோக்கள் வீட்டுக் கதவைத் தட்டி சேர்த்துவிடுமாம். சான் பிரான்ஸிஸ்கோவின் சில பகுதி உணவுவிடுதிகள் உணவை சப்ளை செய்ய இந்த ரோபோக்களை பயன்படுத்துகின்றனர். இவை, சென்சார் கேமரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும். வழியில் எதிர்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியுமாம். இந்த தானியங்கி ரோபோக்களின் செயற்பாடுகளை தொடர்ந்து ஹோட்டலின் உரிமையாளர்கள் கண்காணித்து கொண்டே இருப்பார்களாம். இதனால் உணவை எடுத்து செல்ல எந்தச் சிக்கலும் இருக்காதாம்.

நடைபயிற்சி

கூழாங்கல் நடைபாதையில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. காலில் உள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் தூண்டப்படுகின்றன. இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும்.

மிகவும் சிறியது

போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் எனும் புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 2.4 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தில் செயல்படும். கைக்கு அடக்கமாக உள்ள இதில் 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்ப்புறகேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.

மிகப்பெரிய நகரம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. 334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த பொழுதுபோக்கு நகரம், கலாசாரம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கும் செயல்பாடுகளுக்கான இடமாக அமையவுள்ளது.  சிக்ஸ் ஃப்ளாக் பூங்கா , சஃபாரி பூங்காவும் அமைய உள்ளது.