விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர குறைந்தது ஒரு வருடம் ஆகும்: அமலாக்கப்பிரிவு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      இந்தியா
mallya release(N)

புதுடெல்லி  - ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர குறைந்தது 6, 12 மாதங்கள் ஆகும் என அமலாக்கப்பிரிவு தெரிவித்து உள்ளது.

கடன் மோசடி
இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா நேற்று முன்தினம் லண்டனில் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் விடுதலை ஆனார். கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்படும் நபர் மீதான ஆரம்ப கட்ட விசாரணையும், அதைத் தொடர்ந்து அவர் மீதான நாடு கடத்தும் கோரிக்கை மீதான விசாரணையும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெறும்.

தப்பவிட மாட்டோம்
இதில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இறுதி முடிவு எடுக்கும் வரை விசாரணை தொடர்ந்து நடக்கும். அதே நேரம், நாடு கடத்தப்படுவதில் தொடர்புடைய நபர் அந்த முடிவை எதிர்த்து அனைத்து மேல்கோர்ட்டுகளிலும் இறுதியாக இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட்டு வரையிலும் மேல்முறையீடு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மத்திய அரசு குற்றம் இழைப்பவர்கள் சட்டத்தை எதிர்கொள்ளவேண்டும் என்பதில் மோடி அரசு உறுதியாக இருக்கிறது. இதில் யாரையும் தப்பவிட மாட்டோம் என்றது.


ஒரு வருடம் ஆகும்
இந்நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர குறைந்தது 6, 12 மாதங்கள் ஆகும் என அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. “லண்டனில் விஜய் மல்லையா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதால் நாங்கள் மனமுடையவில்லை. மாறாக விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர ஒருபடி முன்னதாக நகர்ந்து வருகிறோம், உண்மைதான் இதற்காக நீண்டகாலம் பயணிக்கவேண்டும்,” என அமலாக்கப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறிஉள்ளார். மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவருவது என்பது விசாரணை முகமைகள் மற்றும் இந்திய அரசுக்கு எளிதான நடவடிக்கையாக இருக்காது. லண்டன் கோர்ட்டில் சுமார் 12 விசாரணைகளாவது நடக்கும், மேலும் அந்நாட்டு உயர் நீதிமன்றத்திற்கும் செல்லும்.

தீவிர நடவடிக்கை
கடந்த 2 நாட்களாக சிபிஐ மற்றும் அலாக்கப்பிரிவு அதிகாரிகள் இணைந்த சிறப்பு குழு ஒன்று விஜய் மல்லையாவிற்கு எதிராக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக லண்டன் செல்லும் என்ற யூகமானது பரவலாக பரவி வருகிறது. சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஆர்.கே. கவுர் தெரிவிக்கையில், “லண்டனுக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளதா மற்றும் விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்ற விவகாரத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் பங்கு கொள்ளவேண்டுமா என்பதிலும் நாங்கள் முடிவு செய்யவில்லை.” என்றார். எங்களுடைய தரப்பு நடவடிக்கை முடிவில் அவரை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையானது தொடங்கி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வழக்கு விவரங்கள் ...
இதற்கிடையே சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரிகள் இந்தியாவில் விஜய் மல்லையாவிற்கு எதிராக உள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லண்டன் கோர்ட்டின் முன் தாக்கல் செய்யும் வகையில் அதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: