முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பதவி விலக வலியுறுத்தி வெனிசுலா அதிபருக்கு எதிராக லட்சக்கணக்கில் மக்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

கராகஸ்  - வெனிசுலா அதிபரை பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் அதிபருக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ரபேல் சாவஸ் மரணம்
தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ளது வெனிசுலா நாடு. பெட்ரோல் உற்பத்தியில் உலகில் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த நாட்டில் நீண்ட காலமாக ரபேல் சாவஸ் அதிபராக இருந்து வந்தார். நாட்டின் மிகப் பெரிய தலைவராக திகழ்ந்து வந்த அவர், 2013-ம் ஆண்டு நோயினால் மரணம் அடைந்தார். அவர் ஆட்சியில் இருந்தவரை நாட்டில் அமைதி நிலவி வந்தது. அவர் மரணம் அடைந்ததும் நிக்கோலஸ் மாதுரோ அதிபர் ஆனார். ஆனால், அவரால் ஆட்சியை சரியாக நடத்த முடியவில்லை.

போராட்டம்
எண்ணை வளம் மிக்க நாடாக இருந்தாலும் பொருளாதாரத்தில் வெனிசுலா வீழ்ச்சியை சந்தித்தது. பண வீக்கம் பல மடங்கு அதிகரித்தது. எனவே, மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. விலை வாசி கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளது. எனவே, அதிபருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களில் பல தலைவர்களை அதிபர் கைது செய்து ஜெயிலில் அடைத்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அதிபருக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அதிபர் பதவி விலக வேண்டும், உடனடியாக அதிபர் தேர்தல் நடத்த வேண்டும், ஜெயிலில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

போலீஸ் தடியடி
தலைநகரம் கராகஸ் மற்றொரு முக்கிய நகரமான சான் கிறிஸ்டோபல் ஆகியவை உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் மக்கள் தெருக்களில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தினார்கள். கராகஸ் மற்றும் சான் கிறிஸ்டோபலில் துப்பாக்கி சூடு நடந்தது. கராகஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் வாலிபர் ஒருவர் பலியானார். சான் கிறிஸ் டோபலில் பெண் ஒருவர் பலியானார். கராகஸ் நகரில் அதிபர் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அதிபருக்கு எதிரான போராட்டம் நேற்றும் நீடித்தது. இதனால் வெனிசுலாவில் எங்கு பார்த்தாலும் கலவர சூழ்நிலை நிலவுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் பலி
வெனிசுலாவில் அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற பேரணியின் போது, போலீசார் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 17 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினான். இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண்ணும் துப்பாக்சூட்டில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடைசி ஒரு மாதத்தில் மட்டும் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்