பொதுமக்களும் - தொண்டர்களும் எங்களை குற்றவாளியாக பார்த்தனர் : அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      தமிழகம்
KC Veeramani Jolarpet

ஜோலார்பேட்டை  - சசிகலா அணியில் இருந்ததால் பொதுமக்கள் எங்களை குற்றவாளியாக பார்த்தனர் என வேலூரில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியுள்ளார். வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

தயாராக இல்லை
ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்தது. தொகுதி மக்களையும், கட்சி தொண்டர்களையும் நான் எப்படி பார்ப்பேன் என இருந்தேன். வேலூர் மாவட்டத்தில் தொண்டர்களும், நிர்வாகிகளும் என்னை குற்றவாளியாக பார்த்தார்கள். எந்த ஒரு சுபநிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள யாரும் அழைக்காத நிலையில் நான் மிகவும் வருத்தப்பட்டேன். தொண்டர்களை நாங்கள் அழைத்தும் அவர்கள் சந்திக்க வர மறுத்தார்கள். நான் அவர்களிடத்தில் எங்கள் மாவட்டத்தில் யாரும் உங்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள். தொகுதி மக்களும், கட்சி தொண்டர்களும் உங்களை ஏற்க தயாராக இல்லை என தைரியமாக கூறினேன்.

விரட்டியுள்ளோம்
சசிகலா, நடத்திய நாடகம் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும். அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து இந்த குடும்பத்தை அகற்ற வேண்டும் என திட்டமிட்டு தற்போது குடும்ப அரசியலை விரட்டியுள்ளோம். மத்திய அரசு அ.தி.மு.க. அரசை கலைக்க திட்டம் தீட்டியது. எம்.ஜி.ஆர். காலத்தில் உருவான அ.தி.மு.க.வை யாராலும் பிரிக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ஒரு குடும்பத்திற்காக நாங்கள் ஆட்சியை இழக்க விருப்பம் இல்லை. அதனால் தான் அந்த குடும்பத்தை நாங்கள் ஒதுக்கி வைத்தோம். கட்சி பிரிவு என்பது அண்ணன், தம்பி சண்டை போன்றது. இதை நாங்கள் சரிசெய்து கொள்வோம். 10 பேர் கொண்ட குழு அமைத்து, இனிவரும் காலங்களில் கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவது குறித்து முடிவு எடுப்போம். நிச்சயமாக குடும்ப அரசியலை விரட்டி அ.தி.மு.க.வை ஒருங்கிணைத்து இரட்டை இலையை மீட்போம்.இவ்வாறு அவர் பேசினார்.


இதை ஷேர் செய்திடுங்கள்: