சபரிமலை அய்யப்பனை இளம்பெண்கள் தரிசிக்கவில்லை: கேரள அமைச்சரிடம் தேவசம் போர்டு அறிக்கை தாக்கல்

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      ஆன்மிகம்
Sabarimalai ladies(N)

திருவனந்தபுரம்  - சபரிமலை சுவாமி அய்யப்பனை இளம்பெண்கள் தரிசிக்கவில்லை, இது தொடர்பான அறிக்கை கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் தாக்கல் செய்யப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு இல்லை
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற சுவாமி அய்யப்பன் கோவில் உள்ளது. சுவாமி அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரி என்ற ஐதீகத்தின் படி 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் இளம்பெண்கள் சுவாமி அய்யப்பனை தடையை மீறி தரிசனம் செய்ததாக அடிக்கடி சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் இணைய தளம் மற்றும் வாட்ஸ் அப்களில் இளம்பெண்கள் சபரிமலை சன்னிதானம் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் பரவியதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

தீவிர விசாரணை
இதுபற்றி விசாரணை நடத்த தேவசம் போர்டு விஜிலென்ஸ் பிரிவுக்கு கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து தீவிர விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் சபரிமலையில் இளம்பெண்கள் யாரும் தரிசனம் செய்யவில்லை என்றும், பம்பையில் போலீசாரிடம் காண்பிக்கப்பட்ட ஆதார் அடையாள அட்டையின் மூலம் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்ச்சைக்கு முடிவு
50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தான் தரிசனம் செய்து உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம் தாக்கல் செய்யப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த சர்ச்சைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: