முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வறட்சி பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ - ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

  மதுரை, -     மதுரை மாவட்ட வறட்சி பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ - ஆர்.பி.உதயகுமார் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
                 மதுரை மாவட்ட வறட்சி பணிகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தினை மாவட்ட  கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமையில் மதுரை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்கே.ராஜு மற்றும்  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேற்று நடத்தினார்கள்.
 இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் கே.ராஜூ பேசியதாவது :-
 இன்று வறட்சி பாதித்த பகுதிகளில் அரசின் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.  தற்பொழுதுள்ள வறட்சி கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  1426ஆம் ஆண்டு பசலி உடைய நிலவரியை இன்றைக்கு நமது தமிழ்நாடு அரசு வறட்சியின் காரணமாக ரத்து செய்துள்ளது.  அதே போல கூட்டுறவு வங்கிகளின் மூலமாக வழங்கப்பட்ட ரூ.3028 கோடி மத்தியக்கால பயிற்கடனை நீண்ட கால கடனாக மாற்றி அமைத்த பெருமை நமது தமிழ்நாடு அரசையே சாரும்.  தற்பொழுது தமிழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 32,30,191 விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் இடுப்பொருள் நிவாரணம் வழங்கியதும் நமது தமிழ்நாடு அரசு தான்.  2015-16ல் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.5208 கோடி ரூபாய் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.  அதே போல் தற்பொழுது வழங்குகின்ற கடன்களையும் வட்டியில்லா கடனாக மாற்றி உள்ளது.  மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 21443 விவசாயிகளுக்கு ரூ.30.22 கோடி ரூபாய் இடுப்பொருள் உதவித்தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டுள்ளது.  வறட்சி காரணமாக தீவன பற்றாக்குறை கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ளது.  அதனையும் இதற்காக ரூ.6.91 கோடி விடுவிக்கப்பட்டு ஏற்கனவே அதற்கான தீவனத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இன்றைக்கு கூடுதலாக ரூ.20 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது. 
 2016ல் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற மறைந்த முதல்வர் அம்மா ரூ.5280.25 கோடி பயிர்க்கடனை ரத்து செய்தார்.  இதன் மூலம் 12,02,075 விவசாயிகள் பயன்பெற்றனர்.  வனவிலங்குகளுக்கு குடிநீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் வேலையில் அவைகளுக்கென தீவன வசதி, குடிநீர் வசதியை செய்து தருவதற்காக சிறு தொட்டிகள் கடடுவதற்காக ரூ.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு அதற்கான திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது.  நமது தமிழ்நாடு அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை தற்பொழுது 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.                   
 கிராமப்புறங்களில் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறையை போக்க ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதே போல் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.170 கோடி ரூபாய் ஒதுக்கி குடிநீர் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  பொதுப்பணித்துறையின் மூலமாக நீர்நிலை ஆதாரங்களை மேம்படுத்த ரூ.28 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  கோடைக்கால குடிநீர் தேவையை போக்கும் பொருட்டு மாநில பேரிடர் நிதியிலிருந்து ஏற்கனவே ரூ.105 கோடி விடுவிக்கப்பட்டதோடு மேலும் ரூ.100 கோடி கூடுதலாக இன்றைக்கு விடுவித்து அந்த பணிகளும் இன்றைக்கு தங்கு தடையின்றி குடிநீர் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு வசதியுடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்படுத்தி வருகிறது.  குடிமராமத்து திட்டம் 2016-17ம் ஆண்டு 30 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1519 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.  இதில் தற்பொழுது ரூ.300 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
 இந்த ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது :-
 பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இருந்து மக்களை எந்த ஒரு துயரமும் அடையக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இரண்டு நாட்களுக்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் முதற்கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கியதன் மூலம் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது.  இந்த ஆய்வின் நோக்கமானது மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை முற்றிலுமாக துடைத்தெறிந்து அதன் மூலமாக மக்களுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே ஆகும்.  தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 32 இலட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கு எடுக்கப்பட்டு அதற்கு தேவைப்படுகின்ற இடுப்பொருள் நிவாரண உதவி தொகையாக ரூ.2,247 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த நிவாரணத் தொகை முழுமையாக அந்த அந்த பகுதிகளுக்கு தாலுகா வாரியாக, நாம் எப்படி வெற்றிகரமாக மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கின்றோம் என்பதை பற்றி ஆய்வு செய்வதற்காகவே ஆகும்.  மேலும் விவசாயிகளுக்கு காப்பீட்டுத்திட்டத்திற்காக ரூ.411 கோடி வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை எந்த மாநிலமும் செய்யாத ஒன்றாக வங்கிக்கணக்கிலே வரவு வைக்கும் ஒரே அரசு நமது தமிழகஅரசு தான்.  ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  குடிநீர் பற்றாக்குறையை பொறுத்த வரையில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மதுரை மாவட்டமும் ஒன்று.  ஆனால் நமது மாவட்ட நிர்வாகம் மிகச்சிறப்பாக செயல்பட்டு குடிதண்ணீர் பிரச்சனையை சமாளிக்க மாற்று கருத்தினை தெரிவித்து அதற்காக பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் ரூ.10 கோடியும், மாநகராட்சியின் மூலம் ரூ.11 கோடியும் பெற்று தண்ணீர் இருக்க கூடிய விவசாய நிலங்களை கண்டு அறிந்து அந்த நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அங்கு ஆழ்துறை கிணறுகள் அமைத்து அதன் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.  இது பாராட்டத்தக்க ஒன்றாகும்.                                               
 மேலும், மதுரை மாவட்டத்தில் பல்வேறு குடிமராமத்துப் பணிகள் பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கால்நடைகளுக்காக பேரிடர் மேலாண்மையின் மூலம் ரூ.6 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அதன் மூலம் மானிய விலையில் அதற்கான தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இதற்காக மேலும் ரூ.20 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  குடிநீரை பொருத்தவரையில் மாநில பேரிடர் மேலாண்மையின் மூலம் முதற்கட்டமாக ரூ.105 கோடி ரூபாயும் சமீபத்தில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆய்வுக்கூட்டத்தில் மேலும் ரூ.100 கோடி ரூபாய் குடிநீருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 மறைந்த நமது முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 110ம் விதியின் கீழ் அறிவித்த திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும் தற்பொழுது ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.  அடுத்த மூன்று வருடங்களுக்குள் மதுரை மாவட்டத்திற்கு ரூ.800 கோடி ரூபாய் செலவில் அம்ருத் திட்டம் குடிநீருக்காக ஒதுக்கப்பட உள்ளது.  இதிலிருந்து மதுரை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அவர்கள் நமது மாவட்டத்தின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு நிதி பெற்றுத் தருகிறேன் என்று கூறியுள்ளார்கள்.  இது வரவேற்கத்தக்க ஒன்று. இவ்வாறு அவர் பேசினார்.
 இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி.இராஜன்செல்லப்பா (மதுரை வடக்கு), ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்), பி.நீதிபதி (உசிலம்பட்டி), பி.பெரியபுள்ளான் (மேலூர்), மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி,கூடுதல் கலெக்டர் ரோஹிணிராம்தாஸ், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago