6 மாதங்களுக்கு முன் மரணம் அடைந்த தாய்லாந்து மன்னர் உடல் தகனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

வியாழக்கிழமை, 20 ஏப்ரல் 2017      உலகம்
King Bhumibol Adulyadej(N)

பாங்காக்  - தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல் அக்டோபர் மாதம் பாங்காக் நகரில் உள்ள பொது சதுக்கத்தில் தகனம் செய்யப்படும் என தாய்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஓராண்டு துக்கம்
தாய்லாந்து நாட்டின் மன்னராக இருந்து வந்த பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88), உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி மரணம் அடைந்தார். 18 வயதில் மன்னரான அவர் 70 ஆண்டு காலம் பதவி வகித்து, மக்களின் அன்பைப் பெற்று, ஒன்பதாவது ராமராக கருதப்பட்டார். அவரது மரணத்தையொட்டி ஓராண்டு காலம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என தாய்லாந்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தகன அறிவிப்பு
அவரது உடல் வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி, பாங்காக் நகரில் உள்ள பொது சதுக்கத்தில் தகனம் செய்யப்படும் என தாய்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு பூமிபால் அதுல்யதேஜின் மகனும், தற்போதைய மன்னருமான மகா வஜிரலோங்காரன் ஒப்புதல் அளித்துள்ளார். இதை அரண்மனையும் உறுதி செய்தது.


5 நாட்கள் ...
மன்னர் பூமிபால் அதுல்யதேஜின் இறுதிச்சடங்குகள் 5 நாட்கள் நடைபெறும் என துணைப்பிரதமர் விஸ்சானு கிரியா நகம் அறிவித்துள்ளார். இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல் தகனம் செய்த பின்னர், புதிய மன்னராக மகா வஜ்ஜிரலங்காரனுக்கு முறைப்படி முடிசூட்டும் நிகழ்ச்சிகள் தொடங்கி விடும். அதன்பின்னர் நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என தாய்லாந்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்: