முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24-ம் தேதி முதல் அரசு இ-சேவை மையங்களில் குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்யலாம் : தமிழக அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - வருகிற 24-ம் தேதி முதல் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக புதியதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற குடும்ப அட்டை தொடர்பான சேவைகள், வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு இ-சேவை மையங்கள்
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-  தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்பொழுது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. பொது மக்களுக்கு அரசின் சேவைகளை நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.

என்னென்ன திட்டம்
இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ், முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மூவலூர் இராமமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் வழங்கப்படும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆகிய மின் ஆளுமை அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

வரிகளும் செலுத்தலாம்
மேலும், இந்த பொது சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரியை செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்கள் வாயிலாக மாநில மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் தங்களது இல்லங்களின் அருகிலேயே பெற்று வருகிறார்கள். இச்சேவை மையங்கள் வாயிலாக கூடுதலான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டி அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

குடும்ப அட்டையில் திருத்தம்
அதன் ஒரு பகுதியாக, 24-ம் தேதி முதல் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக புதியதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன் குடும்ப அட்டை தொடர்பான சேவைகள், வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை சம்மந்தமான மேற்படி சேவைகள் பெற்றிட பொதுமக்கள் தங்களது இல்லங்களுக்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களை அணுக பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்