முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் : அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் , வளர்மதி வழங்கினர்

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைக்கு மாற்றாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை 125 குடும்ப அட்டைதாரர்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்.

 

பழைய குடும்ப அட்டை

 

இந்நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் மின்னணு குடும்ப அட்டை வழங்கி தெரிவித்ததாவது: அம்மா திட்டங்களை தீட்டி செயல்படுத்துவதில் மட்டும் சாதனையாளராக விளங்கவில்லை. அந்த திட்டங்கள், கடைகோடி பாமர மக்களுக்கும் தடையில்லாமல் பலனளிக்கிறதா என்று கண்காணிக்கும் வல்லமை கொண்டவராக இருந்தார்கள். அதனால் தான் மக்களுக்கு பயனளிக்கும் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக கணினிமயமாக்கி, ஆதார் எண் விவரங்களுடன் அவர்களுக்கு தடையின்றி, தட்டுபாடின்றி உணவுப் பொருட்களை வழங்கிட ஆவன செய்தார்கள். உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் தற்போதைய குடும்ப அட்டைக்கு மாற்றாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி 1.4.2017 முதல் துவங்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்சமயம் 7 இலட்சத்து 57 ஆயிரத்து 230 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டத்தில் 1 இலட்சத்து 8 ஆயிரத்து 650 குடும்ப அட்டை, திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டத்தில் 83 ஆயிரத்து 416 குடும்ப அட்டைகள், இலால்குடி வட்டத்தில் 76 ஆயிரத்து 367 குடும்ப அட்டைகள், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் 55 ஆயிரத்து 810 குடும்ப அட்டைகள், ஸ்ரீரங்கம் வட்டத்தில் 89 ஆயிரத்து 142 குடும்ப அட்டைகள், முசிறி வட்டத்தில் 68 ஆயிரத்து 649 குடும்ப அட்டைகள், தொட்டியம் வட்டத்தில் 40 ஆயிரத்து 453 குடும்ப அட்டைகள், துறையூர் வட்டத்தில் 77 ஆயிரத்து 163 குடும்ப அட்டைகள், மணப்பாறை வட்டத்தில் 65 ஆயிரத்து 430 குடும்ப அட்டைகள், மருங்காபுரி வட்டத்தில் 33 ஆயிரத்து 665 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. தற்போது முதற்கட்டமாக அச்சிட்டு வரப்பெற்ற 30 ஆயிரத்து 81 மின்னணு குடும்ப அட்டைகள் ; அனைத்தும்; பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்டமாக அனைத்து வட்டங்களுக்கும் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 171 மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பெற்றுள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் எட்டு இலக்க எண் அனுப்பப்படும். அக்குறுஞ் செய்தியில் பெறப்பட்ட எட்டு இலக்க எண்ணை விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்து பின் மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, தங்கள் அலைபேசிக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியை அழிக்காமல் பத்திரமாக வைத்திருந்து மின்னணு குடும்ப அட்டை பெற உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மின்னணு குடும்ப அட்டைகள் அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். தங்கள் அலைபேசிக்கு அனுப்பப்பட்ட எட்டு இலக்க எண் ஏழு நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது தற்சமயம் 15 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களுக்கு ழுவுP வரப்பெற்ற நாளிலிருந்து 15 தினங்களுக்குள் நியாயவிலைக் கடை செயல்படும் வேலை நாட்களில் எப்பொழுது வேண்டுமானாலும் சென்று பெற்றுக்கொள்ளலாம். தங்களது அலைபேசிக்கு குறுஞ்செய்தி வரப்பெறாதவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விரைவில் வழங்கப்படும். அதற்கான குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்படும். அதுவரையில் தங்களது பழைய குடும்ப அட்டையையே பயன்படுத்தி ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் பெற்றுக்கொள்ளளாம். புதிய அட்டை விண்ணப்பிக்க பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கடை மாற்றம், குடும்பத்; தலைவர் மாற்றம் போன்ற காரணங்களுக்காக வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு வரத் தேவையில்லை. பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கருகிலேயே உள்ள பொது இ-சேவை மையத்தை அணுகி தங்களது கோரிக்கைகளை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அட்டை காணாமல் போனால் நகல் அட்டை பெறுவதற்கும், இந்த இ-சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம்.

பொது விநியோகத் திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1967 அல்லது 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மின்னணு குடும்ப அட்டையில் பிழைகள் ஏதேனும் காணப்பட்டால் அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையத்தை தொடர்பு கொண்டு திருத்திக் கொள்ளலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு இதுவரை 3 இலட்சத்து 51 ஆயிரத்து 449 மின்னணு குடும்ப அட்டைகள் வரப்பபெற்று உள்ளன, அவற்றில் 1 இலட்சத்து 25 ஆயிரத்து 113 மின்னணு குடும்ப அட்டைகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பெற்றுள்ளது. இதர மின்னணு குடும்ப அட்டைகள் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகர்(மணப்பாறை), எம்.செல்வராஜ்(முசிறி), மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, மலைக்கோட்டை ஐயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்