முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணைப்பு முயற்சியில் முன்னேற்றம்: : அ.தி.மு.க இரு அணிகளும் குழுக்களை அமைத்தன

வெள்ளிக்கிழமை, 21 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை  - அ.தி.மு.க அம்மா, அ.தி.மு.க புரட்சி தலைவி அம்மா அணிகள் இணைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று தனித்தனியே தங்களது அணியினருடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து வைத்தியலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமியும், கே.பி. முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை ஒ.பி.எஸ் அணியினரும் அறிவித்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
சசிகலா குடும்பத்தை விலக்கி வைத்து விட்டு ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் குழுவாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து தான் அ.தி.மு.கவிலிருந்து ஓதுங்கிவிட்டதாக தினகரன் தெரிவித்தார். இதனையடுத்து அ.தி.மு.கவில் இரு அணிகளையும் இணைப்பதில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க ( அம்மா) அலுவலகத்தில் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி,கே.பி.அன்பழகன் மற்றும் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

குழு அமைப்பு
இதன் பின்னர் மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஆலோசனை நடத்தினார். இந்த இணைப்பு தொடர்பாக யாரும் வெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என்று அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது நிபந்தனைகள் என்னவென்று தெரிந்து கொண்டு அவற்றை உங்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவு எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.யாரையும் ஒதுக்கிவிடுவோம் என்று கருத தேவையில்லை என்றும் அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுவே முதல் முறை
2 மணி நேர ஆலோசனைக்கு பிறகு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். சசிகலாவோ, தினகரனோ இல்லாத நிலையில் முதல் முறையாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் தலைமைக்கழகத்தில் ஆலோசனை நடத்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனையை தொடர்ந்து அ.தி.மு.கவின் அமைப்பு செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைத்திலிங்கம் தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு
இதற்கிடையே தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதிய நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம்சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

7 பேர் குழு
அ.தி.மு.க இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வேலுமணி பேட்டி
அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத் திற்கு பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் பேசினார். பேச்சுவார்த்தை குழு இணைப் பிற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவார்கள். அமைச்சர்கள், நிர்வாகிகள் யாரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யக் கூடாது. இந்த குழு தான் கருத்துக்களை தெரிவிக்கும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும், இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும். எங்களுடைய நோக்கம் குறித்து நேற்றே அமைச்சர் வைத்திலிங்கம் தெளிவாக தெரிவித்துவிட்டார். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் கருத்தாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். இவ்வாறு வேலுமணி கூறினார்.

முனுசாமி தலைமையில் ....
இதற்கிடையே ஒ.பன்னீர்செல்வம் தரப்பில், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க குழு அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர்  கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதனையடுத்து கே.பி.முனுசாமி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்தார். ஒ.பி.எஸ் அணியில், கே.பி.முனுசாமி, பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி, ஜே.சி.டி.பிரபாகரன், ம.ஃபோ.பாண்டியராஜன், பி.எச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேற்கொண்ட குழு மதுசூதனன் மற்றும் ஒ.பி.எஸ் ஒப்புதலோடு அமைக்கப்பட்டதாக அந்த அணியினர் தெரிவித்தனர்.இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ஒ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் நல்லது நடக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்