முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆத்திச்சூடி கல்வெட்டுடன் அவ்வையார் சிலை ஒரு மாதத்தில் திறக்கப்படும்: கவர்னர் தகவல்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கவர்னர் மாளிகை வளாகத்தில் ஆத்திச்சூடி கல்வெட்டுடன் ஒரு மாதத்தில் அவ்வையார் சிலை திறக்கப்படும் என்று கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் கூறினார்.

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையை பொதுமக்கள் சுற்றி பார்க்கும் சுற்றுலா தலமாக்கும் முயற்சியை மேற்கொண்ட பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், கவர்னர் மாளிகையில் உள்ள மரங்களில் அவற்றின் பெயர் பலகையை வைக்க உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு தோட்டக்கலை, வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மரங்கள் மீது பெயர் பலகை தொங்க விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை மற்றும் ஊட்டியில் அமைந்துள்ள கவர்னர் மாளிகைகளில் உள்ள தாவரங்கள், மரங்கள், பூக்கள் குறித்த தொகுப்பு அடங்கிய, ‘புளோரா ஆப் ராஜ் பவன்’ என்ற ஆங்கில புத்தகத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் கவர்னர் மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவிடம், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்கள் மனத்தில் உதித்தது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் கூறியதாவது:-

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, முக்கிய பிரமுகர்கள் என்ற அடையாளம் இல்லாமல் மக்களுடன் பழக வேண்டும் என்று கூறினார். இந்த கருத்து என்னை வெகுவாக கவர்ந்தது.

இந்தநிலையில் மும்பையில் உள்ள மராட்டிய கவர்னர் மாளிகையில் யோகா தினம் கொண்டாடப்பட்டபோது, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.மும்பை கவர்னர் மாளிகையை பார்த்து மக்கள் வியப்பும் ஆனந்தமும் அடைந்தனர். ஜனநாயகத்தில் நாட்டில் எல்லா சொத்துகளும் அனைவருக்கும் சமமாக கருதப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மும்பை கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்வைக்காக நான் அனுமதித்தேன்.

மும்பையில் வசிக்கும் செல்வந்தர் ஒருவருக்கு மும்பையில் உள்ள கவர்னர் மாளிகை வளாகத்துக்குள் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவுடன் அந்த நபர் தினமும் கவர்னர் மாளிகைக்கு வந்து செல்வதாக என்னுடைய பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.அந்த வகையில் சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையையும் பொதுமக்கள் பார்வையிட வேண்டும் என்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளேன். சிங்கப்பூர், மலேசியா போன்ற சிறிய நாடுகள் சுற்றுலாவில் தனிகவனம் செலுத்தி வருகின்றன.அதன்படி இந்தியாவிலும் சுற்றுலா வளர வேண்டும்.

நாட்டின் கலாசாரத்தை எதிர்கால தலைமுறையினரும் அறிய வேண்டும். அந்த வகையில் சென்னை கிண்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் அவ்வையார் சிலை ஒரு மாதத்தில் திறக்கப்பட உள்ளது. ஆத்திச்சூடி கல்வெட்டுடன் இந்த சிலை அமையும். கல்வெட்டில் உள்ள ஆத்திச்சூடியை குழந்தைகள் தொட்டால் ஆத்திச்சூடி வாசகம் குழந்தைகள் மனதில் பதியும் வகையில் ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.கவர்னர் மாளிகையை சுற்றி பார்க்க 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உயரத்தப்படுமா? என்று வித்யாசாகர் ராவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு என்னுடைய அலுவலர்கள் அது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்’ என்றார்.கவர்னர் மாளிகை தர்பார் அரங்கம் நுழைவுவாயில் வெளியே அவ்வையார் சிலை அமைய உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்