முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதி அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதா ? 5 ஆயுள் கைதிகளை விடுவித்தது ஐகோர்ட்டு

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

 சென்னை  - குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த சமூகப்பிரிவைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. கடந்த 2010-ம் ஆண்டு காஞ்சிபுரம் பொன்னியம்மன் கோயிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சுப்பிரமணி என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சிபுரம் 2-வது அமர்வு நீதிமன்றம் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.  இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.நாகமுத்து, என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு ஒருவர் எந்தச் சமூகத்தைச் சார்ந்துள்ளார், அவரது பின்னணி ஆகியவற்றை வைத்து உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் தண்டனை விதித்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தனர்.

அதாவது, இதுவரை இந்த கோர்ட் இத்தகைய ‘மோசமான தீர்ப்பை’ கண்டதில்லை என்று கூறிய நீதிபதிகள், ஒரு நீதிமன்றம் எப்படி தீர்ப்பு எழுதக்கூடாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு உதாரணம் என்று கீழ் கோர்ட் தீர்ப்பை கண்டித்தனர்.  “பதிவு செய்யப்பட்ட உறுதியான ஆதாரங்கள், ஐயத்திற்கிடமில்லாத சாட்சியங்களின் அடிப்படையிலேயே குற்றவாளிகள் என்று கூறப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமே தவிர, அத்தகைய ஆதாரங்கள் இன்றி இவர்கள் எந்த சமூகப்பிரிவைச் சார்ந்தவர்கள், பின்னணி என்ன என்பதைப் பார்த்து தீர்ப்பு வழங்குதல் கூடாது, இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்று கூறி விடுதலை செய்தனர்.

மேலும் இந்தத் தீர்ப்பின் நகலை நீதிமன்ற பதிவாளர் அனைத்து முதன்மை அமர்வு நீதிபதிகளுக்கும் அனுப்ப உத்தரவிட்டனர். இனி வரும் காலங்களில் இன்னொரு தீர்ப்பு புறக்காரணங்களான ஒருவர் சார்ந்த சமூகப்பிரிவு, பின்னணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைந்து விடலாகாது. 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதில் 4 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டை அனுமதித்த நீதிபதிகள், “ஒரு குறிப்பிட்ட வகை குற்றங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகப்பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் எனவே இந்தச் சமூகப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குற்றம் செய்திருக்க வேண்டும் என்றும் எப்படி ஒரு நீதிமன்றம் முடிவுகட்ட முடியும் என்பது உண்மையில் புரியவில்லை. இது கீழ் கோர்ட்டின் தீர்ப்பு கேலிக்குரியது. ஏனெனில் ஒருவர் இன்ன சமூகத்தைச் சேர்ந்தவர் அதனால் அவர் இத்தகைய குற்றத்தை இழைத்திருப்பார் என்று தீர்ப்பளிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்றனர் நீதிபதிகள். 2015-ம் ஆண்டு இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்