முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழவேற்காடு கிளை நூலகத்தில் உலக புத்தக தினவிழா கருத்தரங்கம்

சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2017      சென்னை
Image Unavailable

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை,திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக்குழு,பழவேற்காடு கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழாவினையொட்டி கருத்தரங்கம்,கண்காட்சி,பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான கட்டுரை,பேச்சு,கதை கூறுதல்,ஓவியப்போட்டிகள் அதற்கான அதற்கான பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.

 பாரம்பரியமிக்க நூலகம்

பழவேற்காட்டில் உள்ள நூலகம் 1958 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு பக்தவச்சலம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதாகும். 59 வருடங்கள் பழமையான இந்த நூலகம் இந்நாள் வரையில் கிளை நூலகமாக செயல்பட்டு வருகின்றது.பழவேற்காட்டில் வசித்த சுப்பிரமணியச் செட்டியார் என்ற கொடையாளர் நூலகத்திற்க்கென அளித்த இடத்தில் தற்போதைய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு மேல் மாடியிலும் நூலகம் மற்றும் நூல்கள் குறிப்புதவிக்கூடம் இயங்கி வருகின்றது.மேலும் நூலகத்திற்க்கு வருவோர் எண்ணிக்கையை கூட்டவும்,பள்ளி மாணவர்களின் கணினி அறிவினை வளர்த்துக்கொள்ளவும் நூலகத்தின் தனியறை ஒன்றில் இணையதள சேவை மையமும்,கணினி நகல் பிரிவும் துவக்கப்பட்டுள்ளது.வாசகர் வட்ட குழுவின் மூலம் பல்வேறு வளர்ச்சிபணிகள் இங்கு நடைப்பெற்று வருகின்றது.

 உலக புத்தக தினம்

ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதனை பழவேற்காடு கிளை நூலகம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட நூலகர் ஆனந்தன் மேற்பார்வையில் வாசகர் வட்ட குழுவின் மூலம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.இந்த விழாவிற்கென இளைஞர்களிடையே வாசிக்கும் பழகத்தை ஏற்படுத்தவும்,நூலகத்திற்க்கு மாணவர்களை வரவழைக்கும் நோக்கில் கட்டுரை,பேச்சு,ஓவியம்,கதை கூறுதல் போட்டிகள் நடத்தப்பட்டன.அரிய புத்தங்களை கொண்ட புத்தக கண்காட்சி நடைப்பெற்றது.சிறப்பு வாய்ந்த பிரமுகர்களைக் கொண்டு கருத்தரங்கம் நடைப்பெற்றது.

கருத்தரங்கத்தில் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா,எழுத்தாளர் தூரிகை தூயவன் ஆகியோர் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் கவிஞர் அமரகவி,கிரினியோ-புலிகட் கள இயக்குநர் மீராஷா ஆகியோர் பேச்சுப்போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கி கவிசொற்கள் மொழிந்தனர். முன்னாள் மீஞ்சூர் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சுமித்ராகுமார்,பழவேற்காடு ஜம்போபேக் மேலாளர் சதாசிவம் ஆகியோர் ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணக்கர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.பொன்னேரி மனவளக்கலை மன்ற பேராசிரியர் தசரதன்,பழவேற்காடு ஜ.சு.அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அகத்தியன்,புலிகட் நேஷனல் மெட்ரிக் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரவிசந்திரன் ஆகியோர் கதை கூறுதல் போட்டியில் பரிசுப் பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி உலக புத்தக தின சாரம்சத்தை விளக்கினர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் நெடுஞ்செழியன் கலந்துக்கொண்டார்.பழவேற்காடு நூலக வாசகர் வட்டத்தலைவர் சம்பத்குமார்,துணைத்தலைவர் ஆசிரியர் ஆர்.பி.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.பழவேற்காடு கிளை நூலகர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். நூலகப்பணியாளர் முருகன் நன்றிக்கூறினார். மேலும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் துரை.மகேந்திரன் உள்ளிட்டோர்,தன்னார்வலர்கள்,இளைஞர்கள்,குழந்தைகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்