முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்படத்தில் உள்ள பிரச்சினைகளை மாற்றச் சொல்லலாம் -நீக்கக் கூடாது தணிக்கைத் துறைக்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

சென்னை : படத்தில் பிரச்சினைகள் இருந்தால்  சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் மாற்றம் செய்யட்டும். தணிக்கைத் துறை அதை நீக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

கமல்-விஷால் பங்கேற்பு

தென்னிந்திய திரைப்படத் துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில்  நடைபெற்றது. மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் கமல்ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி, தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

அமைச்சர்  வெங்கையா நாயுடு பேச்சு

அவ்விழாவில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் பல்வேறு கோரிக்கைகள் தமிழ் திரையுலகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசியதாவது,  "முக்கியமாக 3 பிரச்சினைகளை வலியுறுத்தி கூறியுள்ளீர்கள்.

நீண்ட நாட்களாக திருட்டு விசிடி பிரச்சினையால் திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. நமது தேசத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. சினிமா மக்களின் மனதில் எளிதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அவர்கள் மனதை, நடத்தையை கூட மாற்றக்கூடியது. தற்காலிமாக அவர்கள் பிரச்சினையை மறக்க வைக்கிறது. நல்ல செய்திகள் இருக்கும் சினிமாக்களும் பயனுள்ளதாக இருக்கும்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் வரி விதிப்பு இருப்பது நல்லதுதான். ஒரே தேசம், ஒரே மக்கள், ஒரே வரி இருக்க வேண்டும். வரிவிதிப்பில் புரட்சிகரமான மாற்றம் இது. நீண்டநாள் கனவு இது. நாடு முழுவதும் ஒரே சட்டம் வர சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்படும். ஆனால் அதற்கான நஷ்ட ஈட்டை மத்திய அரசு தரும். போகப் போக கட்டணங்கள் குறையும். நுகர்வோர் பயனடைவார்கள்.

ஆனால் எங்கு யாரால் நடந்தது எனத் தெரியவில்லை. திரைத்துறையை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது யாரையும் குறை சொல்லி பயனில்லை. எனது கவனத்துக்கு எடுத்து வந்துள்ளீர்கள். சில வரிவிதிப்புகள் மாநில மொழி திரைப்படத் துறைகளை பாதிக்கும் என சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜிஎஸ்டியில் இருக்கும் கட்டணம் எதுவும் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டதல்ல. ஜிஎஸ்டி குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டது. வரிவிதிப்பு, முதலில் மாநில கட்டுப்பாடிலும், அடுத்து மத்திய அரசு கட்டுப்பாடிலும் இருக்கிறது. ஜிஎஸ்டியால் மாநில அரசும், மத்திய அரசும் ஒன்றிணைந்துள்ளன. இரண்டு அரசுகளுக்கும் இருக்கும் சில அதிகாரங்களை ஜிஎஸ்டி குழுவுக்கு தந்துள்ளன. இந்த குழுவில் மத்திய நிதியமைச்சரோடு அனைத்து மாநில நிதியமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வருவார்கள்.

சினிமா தணிக்கை என்று வரும்போது இரண்டு பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, சினிமாவுக்கு தணிக்கையே வேண்டாம் என்பது. இன்னொரு பக்கம், தணிக்கை இல்லையென்றால் சமூகம் என்ன ஆகும் என்பது. தணிக்கை வேண்டாம், சான்றிதழ் தந்தால் போதும் என ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. படத்தில் பிரச்சினைகள் இருந்தால் படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் மாற்றம் செய்யட்டும். தணிக்கைத் துறை அதை நீக்கக் கூடாது.

ஷ்யாம் பெனகல் கமிட்டியும், ஜஸ்டிஸ் முத்கல் கமிட்டியும் இந்த கோரிக்கைகளை பரிசீலித்து சில பரிந்துரைகளை தந்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அது முடிந்ததும் மீண்டும் சென்னை வந்து உங்களுடன் உரையாடுகிறேன். மும்பையில் அமிதாப் இதுகுறித்து பேசுவதாக சொல்லியிருக்கிறார். கூடிய சீக்கிரம் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும். இந்த விஷயத்தை என் கவனத்துக்கு எடுத்து வந்து, சென்னைக்கு என்னை பேச அழைத்த கமலுக்கு நன்றி" என்றார் வெங்கய்ய நாயுடு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்