முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 549 மனுக்கள் பெறப்பட்டது : கலெக்டர் டாக்டர் பழனிசாமி தகவல்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் நேற்று (24.04.2017) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்; 549 மனுக்கள் பெறப்பட்டது என மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

கோரிக்கை

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட கலெக்டர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர். முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 இலட்சம் வீதம் 15 இலட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலையினையும், 36 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும், 02 நபர்களுக்கு விதவை உதவித்தொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு ரூபாய் 86 ஆயிரத்திற்கான திருமண உதவித் தொகையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 20 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியினையும், 2014-2015ஆம் ஆண்டு சிறந்த சேவை புரிந்தமைக்காக மணப்பாறை வட்டம் இடையப்பட்டியான்பட்டி கிராமம் நேரு இளைஞர் நற்பணி மன்றம்தேர்வு செய்யப்பட்டு மன்றத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், 2015-2016 ஆம் ஆண்டு சிறந்த சேவை புரிந்தமைக்காக திருச்சி புதுவை நகர் பகுதியில் உள்ள டாக்டர்.அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம்தேர்வு செய்யப்பட்டு மன்றத்திற்கு ரூபாய் 25 ஆயிரம் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றினையும், மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட நலப்பணி நிதிக்குழுவிலிருந்து பழனி தைப்பூச திருவிழாவிற்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவரங்கம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் 7463 ஒளிரும் பட்டைகள் தயார் செய்து விநியோகம் செய்யப்பட்டது அதற்கான தொகை ரூபாய் 37 ஆயிரத்து 315 க்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லையில் உள்ள 19 மையங்களில் சிகிச்சை பெற்று வரும் 227 காசநோயாளிகளுக்கு தினந்தோறும் முட்டைகள் வழங்க மாதம் ஒன்றுக்கு ரூபாய் 40 ஆயிரம் வீதம் மூன்று மாதங்களுக்கான தொகை ரூபாய் 1 இலட்சத்து 20 ஆயிரத்திற்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மரக்கன்றுகளை நடுவதை ஊக்கப்படுத்தும் விதமாகவும், நீதிமன்ற ஆணையின்படி அகற்றப்படும் சீமைக்கருவேல மரங்கள் இருந்த இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்திடவும், மாவட்ட நலப்பணி நிதிக்குழு சார்பில் ரூபாய் 26 ஆயிரத்து 240க்கு 3280 மரக்கன்றுகள் கொள்முதல் செய்வதற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட நலப்பணி நிதிக்குழு சார்பாக திருச்சிராப்பள்ளி கீழதேவதானம் பத்மாவதி என்பவரது மகன் (வயது17) விபத்தில் முதுகுத்தண்டில் அடிபட்டு நடக்கமுடியாமல் உள்ளதால் அவரின் மருத்துவ உதவியாக ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையும், திருச்சிராப்பள்ளி ஜீவா நகரை சேர்ந்த மாணவி உமாமகேஷ்வரி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1073 மதிப்பெண்கள் பெற்று தற்பொழுது பி.காம் முதலாமாண்டு படிக்க கல்வி நிதியுதவியாக ரூபாய் 5 ஆயிரத்திற்கான காசோலையும், இலால்குடி வழுதியூர் கிராமத்தை சேர்ந்த மாணவி மிரோஸிலின் மோனிகா இளங்கலை இயற்பியல் பிரிவில் முதலாமாண்டு படிக்க கல்வி உதவித்தொகை ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவன் கோகுல் என்பவருக்கு ரூபாய் 7 ஆயிரத்திற்கான பரிசுத்தொகையினையும், 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவன் முகேஸ்வரன் என்பவருக்கு ரூபாய் 10 ஆயிரத்து 500க்கான பரிசுத் தொகையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 44 பயனாளிகளுக்கு ரூபாய் 19 இலட்சத்து 12 ஆயிரத்து 55 மதிப்பில் நலத்திட்டங்களை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்