முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் தாக்கியதில் 26 ரிசர்வ் போலீசார் பலி: பிரதமர் மோடி கண்டனம்

திங்கட்கிழமை, 24 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

ராஞ்சி, சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தாக்கியதில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த போலீசார் 26 பேர் பலியானார்கள் மற்றும் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள், நக்சலைட்கள் பதுங்கியிருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். நாசவேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களை யாராவது காட்டிக்கொடுத்தால் அவர்களை கண்ட இடத்திலேயே சுட்டுக்கொள்வதும் கூட்டிச்சென்று சித்ரவதை செய்து கொல்வது போன்ற ஈவு இரக்கமற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்

பாதுகாப்பு மற்றும் இதர பணிகளுக்காகவும் செல்லும் போலீசார், மத்திய படையினர், ரிசர்வ் போலீசாரையும் மாவோயிஸ்ட்களும் நக்சலைட்களும் இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும் கண்ணிவெடி வெடித்தும் தாக்கி வருகிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் ரிசர்வ் போலீசார் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் பாதுகாப்புக்காக மோட்டார் வாகனத்தில் சென்ற மத்திய படையினர் மீது மாவோயிஸ்ட்கள்  கண்ணிவெடி வெடித்து தாக்குதல் நடத்தியதில் 15-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியானார்கள்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த ஒருசில மாதங்களுக்குள் சத்தீஸ்கர் மாநிலத்தில் மவோயிஸ்ட்கள் மீண்டும் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் சாலை வசதி இல்லாத சுக்மா என்ற இடத்தில் சாலை போடும் பணியில் மத்திய ரிசர்வ் போலீசார் நேற்று ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மிகவும் கவனமாகத்தான் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்தபோதிலும் இவர்களின் கண்களில் படாமல் 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் ஒன்று சேர்ந்து மறைந்திருந்தனர். ரிசர்வ் போலீசார், பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதை பார்த்த மாவோயிஸ்ட்கள் இயந்திர துப்பாக்கிகளால் சுட்டும்  வெடிகுண்டுகளை வெடித்தும் தாக்குதல் நடத்தினர். ரிசர்வ் படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இருந்தபோதிலும் மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் இருந்ததால் அவர்களின் ஆயுத தாக்குதலில் ரிசர்வ் போலீசார் 26 பேர் பலியானார்கள் மற்றும் பலர் துப்பாக்கி காயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவோயிஸ்ட்கள் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு பாதுகாப்பு படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து சென்று சோதனை செய்து பார்த்ததில் மாவோயிஸ்ட்கள் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ வெடிமருந்து பொருளை கண்டுபிடித்து எடுத்தனர்.

மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வீரர்களின் வீரமரணம் வீணாகப்போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் மோடி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்