முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்திட சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களை கோடை வெப்பத்திலிருந்து பாதுகாத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை சார்பாக நோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் கல்வி, தொழிற் நிறுவனங்கள், குடிசைப்பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முனைவர்.தா.கார்த்திகேயன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கோடைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

சுழற்சி முறை

அதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் அம்மா உணவகங்கள் ஆகியவற்றில் தேவையான அளவு உப்பு, சர்க்கரைக்கரைசல் பாக்கெட்டுகள் (.ஆர்.எஸ். பாக்கெட்டுகள்) பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளன. கோடைக்காலத்தில் பொதுவாக வரும் நோய்களான வயிற்றுப்போக்கு, தட்டம்மை, சின்னம்மை, கடுமையான தலைசுற்றல் போன்ற நோய்களை குணப்படுத்த தண்டையார்பேட்டையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தவிர தூய்மையற்ற காலாவதியான குடிநீர் கேன்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகள் மற்றும் தூசு படிந்த, ஈ மொய்த்த திறந்தவெளியில் விற்பனை செய்யப்படுகின்ற உணவு வகைகள் தொடர்ந்து சுகாதாரத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கோடைக்காலத்தில் கடுமையான வெயில் நேரமான காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நேரடியாக வெயிலில் செல்லுவதை தவிர்க்குமாறும், அவசியமாக செல்ல நேர்ந்தால் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்வதுடன், குடை மற்றும் தொப்பி அல்லது தலை மறைக்கும் துணி வைத்து இருக்குமாறும், வெயிலில் செல்லும் போது தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அல்லது அரசு மருத்துவமனையை அணுகிடவும், வெயில் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் போன்ற வாசகங்களுடன் பொதுமக்கள் கோடைக்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை மற்றும் கடைப்பிடிக்க கூடாதவைகள் போன்ற நடவடிக்கைகள் குறித்த மூன்று இலட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஒத்துழைப்புடன் தியாகராயநகர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கும், தியாகராயநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளுக்கும் வழங்கப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மூலமாக பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், இரயில் நிலையங்கள், தொழிற் நிறுவனங்கள், குடிசைப்பகுதிகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்