முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மானிய கடன் பெற்ற தொழில் நிறுவனங்கள்: கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

 

நாமக்கல் மாவட்டம், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நேற்று (25.04.2017) நடைபெற்றது. கலெக்டர் மு.ஆசியா மரியம் தொழில் நிறுவனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், ஏ.கே.சமுத்திரம் ஊராட்சியில் உள்ள டெய்லி பிரஷ் (பி) லிட். நிறுவனம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் முதலீட்டு மானிய திட்டத்தின் கீழ் கடந்த 2008-ஆம் ஆண்டு ரூ.1.50 கோடி முதலீட்டில் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனம் தொடங்கி நடத்தி வரப்படும் நிறுவனம் ரூ.25.00 இலட்சம் முதலீட்டு மானியமாக பெற்றுள்ளது. மேலும் 2010-ஆம் ஆண்டு ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டும், 2012-ஆம் ஆண்டு ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டும் என மொத்தம் தளவாடச்சாமான்கள் மற்றும் இயந்திரங்களுக்கு ரூ.10.00 கோடி முதலீடு செய்யப்பட்டு இந்நிறுவனம் நடைபெற்று வருகிறது. இதற்கு அரசின் மூலம் ரூ.30.00 இலட்சம் முதலீட்டு மானியமாக இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் மாம்பழம், ஆப்பிள், கொய்யா போன்ற பழங்கள் மூலம் பழச்சாறுகள் தயாரித்தல் மற்றும் சோடா தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. இப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் மு.ஆசியா மரியம் பழச்சாறுகள் தயாரிக்கும் முறைகள் குறித்தும் விற்பனை செய்யப்படும் வகைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிறுவனத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மின்னாம்பள்ளியில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் கடனுதவி பெற்று முதலீட்டு மானியத்திட்டத்தில் பயன்பெற்று தென்னை மட்டையிலிருந்து, நார், கயிறு மற்றும் காயர்பித் தயாரிக்கும் தொழில் நிறுவனமான ரீச் பைபர் என்ற சிறு நிறுவனத்தினை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிறுவனம் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் தென்னை மட்டையிலிருந்து, நார், கயிறு மற்றும் காயர்பித் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகின்றது. இந்நிறுவனத்திற்கு மாவட்ட தொழில் மையத்திலிருந்து இதுவரை ரூ.7.50 இலட்சம் முதலீட்டு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.5.50 இலட்சம் மானியத்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தேங்காய் நார் கயிறுகள் உற்பத்தி செய்யும் பணியும், தேங்காய் நார் கழிவிலிந்து தென்னை நார் கழிவு கேக்குகள் தயாரிக்கப்பட்டு வரும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

வேலை வாய்ப்பு

மாவட்ட தொழில் மையத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.99.96 இலட்சம் மதிப்பீட்டில் ரமேஷ் என்பவர் சேந்தமங்கலம் வட்டம், கொண்டமநாய்க்கன்பட்டி, மேட்டுப்பட்டறை பகுதியில் அதி நவீன விசைத்தறிகள் மூலம் துணி உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணியினை கலெக்டர் மு.ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிறுவனத்திற்கு ரூ.24.99 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். அரசு மானிய நிதியுதவியுடன் சிறப்பாக தொழிலை மேற்கொண்டு வரும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்களுடைய தொழில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக உற்பத்தியை மேற்கொள்வதோடு, அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிட முன்வர வேண்டுமென தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ராஜு உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்