முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.கவின் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் : ஜூலை மாதம் 15-ம் தேதி தீர்ப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவிப்பு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி.க்கு சட்டவிரோதமாக 214 கோடி ரூபாய் கைமாறிய வழக்கு ஆகியவற்றில் வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு
முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதில், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, நாட்டுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இறுதிவாதம் முடிவடைந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் 214 கோடி ரூபாய், கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி.க்கு, சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பான வழக்கும் இதே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல்
இந்த வழக்குகளில் சி.பி.ஐ. சார்பில், கடந்த 2011-ம் ஆண்டும், அமலாக்கப்பிரிவு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதி வாதங்கள் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தன. தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசு விதிமுறைகளை மாற்றி, தகுதி இல்லாத நிறுவனங்களுக்கும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் அளித்து பெருமளவு ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

ரூ. 214 கோடி கைமாறியது
இந்த ஊழல் பணத்தில் கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சியான கலைஞர் டி.வி.க்கு 214 கோடி ரூபாய் சட்டவிரோதமாக கைமாறியது. எனவே, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் வாதிட்டார். இந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக நீதிமன்றத்தில் ஆஜரான தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் தங்கள் கூடுதல் வாதங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டனர். அதன்படி கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு கூடுதல் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த 2 வழக்குகளிலும் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் மற்றும் கலைஞர் டி.வி வழக்குகளில் ஜூலை மாதம் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி நேற்று அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்