முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்சம் வாங்கி கைதான கூடங்குளம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு: விக்கிரமன் எஸ்.பி.நடவடிக்கை

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      திருநெல்வேலி

 

லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமன் ‘சஸ்பெண்டு’ செய்தார்

ஒப்பந்த அடிப்படையில்

 கூடங்குளம் அணு மின்நிலையத்தில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் பலர் பணியாற்றி வருகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலைய பகுதியில் அன்னியர்கள் யாரும் நுழைய முடியாது. பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்த பகுதி உள்ளது. இங்குள்ள மற்ற தினக்கூலி வேலைகளை செய்வதற்கு காண்டிராக்ட் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்து அதில் தங்களது ஆட்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அனுப்பி வைக்கின்றன.கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வேலை பார்ப்பதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனமானது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை ஆட்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை கொடுத்து சான்று பெற வேண்டும்.

ஒப்புதல் சான்று

 பின்னர் அதனை கூடங்குளம் போலீஸ் நிலையத்திலும் காண்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு ஏதும் இல்லை என்பதற்கு அத்தாட்சியாக அதில் கூடங்குளம் இன்ஸ்பெக்டர் கையெழுத்திட்டு ஒப்புதல் சான்று வழங்குவார்.

லஞ்சம்

இவ்வாறாக கையெழுத்து போடுவதற்கு ஒரு அனுமதி கடிதத்திற்கு கூடங்குளம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் ரூ.500 லஞ்சம் பெற்று வருவதாக கூடங்குளத்தை சேர்ந்த ராஜா என்பவர், நெல்லையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கூடங்குளம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர்.

விசாரணை

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜிடம், மேற் கண்ட புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெளியாட்கள் வேலை செய்வதற்கான சான்று படிவங்களில் கையெழுத்து போடுவதற்கு மொத்தம் ரூ.15 ஆயிரம் வரை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

சஸ்பெண்டு

பின்னர் அவரை கைது செய்தனர். கைதான இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் நெல்லை அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே லஞ்சம் வாங்கி கைதான இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்கிரமன் ‘சஸ்பெண்டு’ செய்தார். இதற்கான உத்தரவு சிறையில் இருக்கும் கிருஷ்ணராஜிடம் வழங்கப்பட்டது

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்