கடலூர்.பண்ருட்டி பகுதியிலுள்ள பள்ளி வாகனங்கள்: கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      கடலூர்
cud collector 2017 04 26

 

கலெக்டர் டி.பி.ராஜேஷ் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடலூர் மற்றும் பண்ருட்டி பகுதி சார்ந்த பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்

பள்ளி வாகனங்கள்

 கலெக்டர் டி.பி.ராஜேஷ், கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பண்ருட்டி பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார்.கலெக்டர் அவர்களின் அறிவுரையின்படி கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 179 பள்ளிகளைச் சார்ந்த 721 பள்ளி வாகனங்கள் நேரடியாக ஆய்வு செய்யப்படுகிறது. கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 75 பள்ளிகளைச் சார்ந்த 253 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது.கலெக்டர் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

மூன்று இடங்களில்

 கடலூர் மாவட்டத்தில் இன்று கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள 179 பள்ளிகளைச் சார்ந்த 721 பள்ளி வாகனங்கள் நேரடி ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வு மூன்று இடங்களில் நடைபெறுகிறது.கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் பண்ருட்டி பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்கள் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்திலும், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் நெய்வேலி பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்கள் சிதம்பரம் செம்போர்டு பள்ளி மைதானத்திலும் மற்றும் விருத்தாச்சலம் பகுதி அலுவலகம் சார்ந்த பள்ளி வாகனங்கள் விருத்தாச்சலம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் நேரடி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது

நீதிமன்ற உத்தரவின்படி

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்களுடன் ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வானது உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012ன் படியும் நடைபெறுகிறது. இந்த ஆய்வில் ஓட்டுநர்களுக்கு 5 வருடம் நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டிய அனுபவம் உள்ளதா, வாகனத்தின் ஜன்னல்களில் கிரில் பொருத்தப்பட்டுள்ளதா, முதலுதவி பெட்டி உள்ளதா, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் தற்போதை நிலை எப்படி உள்ளது, வாகனத்தில் அவசர கால வழி உள்ளதா, அவை சாரியானபடி இயங்குகின்றதா என்பதை ஒவ்வொரு வாகனத்திலும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவார்கள்.

அனுமதி

இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரிசெய்ய ஒரு வார காலம் அனுமதி வழங்கப்பட்டு, வாகன உரிமையாளர்கள் அதை சரிசெய்து வந்த பின்னரே சான்றிதழ் வழங்கி வாகனம் இயங்க அனுமதிக்கப்படும். நமது மாவட்டத்தில் பள்ளி வாகனத்தின் ஓட்டுநர்கள் வாகனங்களை வேகமாக ஓட்டாமலும், குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு கொண்டு செல்லவும், வீட்டில் இறக்கி விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

உரிமம் ரத்து

பள்ளி வாகனங்கள் மற்ற வாகனங்களுடன் போட்டிப்போட்டுக்கொண்டு ஓட்டுவதாகவும், வேகமாக செல்வதாகவும் புகார் வந்தால் அந்த பள்ளி வாகனத்தின் உரிமத்தினை ரத்து செய்யவும், அதோடு மட்டுமில்லாமல் அந்த வாகனத்தின் ஓட்டுநரின் உரிமத்தையும் ரத்து செய்யவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆகவே, பள்ளி வாகன ஓட்டுநர்கள் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லவேண்டும். மேலும், இந்த வருடாந்திர ஆய்வு மட்டுமின்றி 3 மாதத்திற்கு ஒரு முறை திடீர் ஆய்வும் பள்ளி வாகனங்கள் மீது மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

பலர் பங்கேற்பு

இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ், கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் நரசிம்மன், வட்டார போக்குவரத்து அலுவலர் மணி, கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.சுந்தரராஜ், பண்ருட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கே.பிச்சையப்பன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: