முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2017      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி  - தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியின் பாரம்பரியமிக்க கவர்னர்மாளிகையான ராஜ் நிவாஸை வரும் மே மாதம் முதல் பொது மக்கள் பார்வையிடலாம். சிறந்த கட்டிடக்கலை, பூங்கா உடைய ராஜ் நிவாஸை இலவசமாக மக்கள் பார்க்க இணையத்தில் பதிவு செய்யலாம்.

பிரெஞ்சு காலத்து...
புதுச்சேரி நகரின் மைய பகுதியில் உள்ள துணைநிலை கவர்னர் மாளிகையான ராஜ் நிவாஸ் பிரெஞ்சு காலத்து கட்டிடத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். கடந்த. 1738-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டிடம் வரும் மே மாதம் முதல் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.இதற்கான அனுமதி இலவசம்.

திங்கள் முதல் சனி வரை
வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை முன் அனுமதி பெற்றவர்கள் ராஜ் நிவாஸைப் பார்வையிடலாம் நாளொன்றுக்கு தலா 30 பேர் வீதம் இரு பிரிவுகளாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க விரும்புவோர் Rajnivas.py.gov.in என்கிற இணைய தள முகவரியில் முன் அனுமதி பெற வேண்டும்.
கவர்னர்மாளிகை தரப்பில் இதுதொடர்பாக கூறியதாவது:-

திரைப்படக் காட்சி
புதுவை துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றவுடன் மாலை நேரங்களில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும் புதுவை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிஞர்களை அழைத்து சிறப்பு சொற்பொழிவுகள், அரசு பள்ளி மாணவ, மாணவியர், காப்பக குழந்தைகளுக்கு சிறப்பு திரைப்படக் காட்சிகளும் கவர்னர்மாளிகையில் நடத்தப்பட்டு வருகின்றது.

இணையத்தில் பதிவு
கவர்னர்மாளிகையில் அழகான மலர்களுடன் கூடிய தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பிரெஞ்சு கால கட்டிடத்துக்கு இம்மாளிகை ஓர் உதாரணம். மாளிகையில் பூங்கா, தர்பா ஹால், அழகான ஓவியங்கள் என பார்க்க ஏராளமான விஷயங்கள் இங்குள்ளன. உள்நாட்டவர், வெளிநாட்டவர் என இரு பிரிவுகளாக பார்க்கலாம். மொத்தம் 60 பேர் பார்க்கலாம். பெயரை இணையத்தில் பதிவு செய்து விட்டு நேரம் பெற்று அனைவரும் உரிய அடையாள அட்டையுடன் ராஜ் நிவாசுக்கு வந்தால் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை முடிந்த பின் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு மொழி தெரிந்த வழிகாட்டிகள் விளக்குவர்.

கிரண்பேடியுடன் புகைப்படம்
கவர்னர்மாளிகைக்கு வரும் பார்வையாளர்கள் படங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். பார்வையாளர்கள் கருத்துகளையும் இணையத்தில் வர ஏற்பாடு செய்யும் திட்டமுண்டு. மாளிகையை பார்த்த பின்பு கிரண்பேடியுடன் புகைப்படம் எடுக்கலாம்.அனைத்து தரப்பு மக்களும் கவர்னர்மாளிகையே எளிதாக அணுகுவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்