முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா பா.ஜ.வில் உள்கட்சி மோதல் வலுக்கிறது: மேலிடம் கவலை

வியாழக்கிழமை, 27 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூர், கர்நாடகம் மாநிலத்தில் பாரதிய ஜனதாவில் உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதனால் கட்சி மேலிடம் கவலை அடைந்துள்ளது.

தென்னிந்தியாவில் முதன் முதலாக கர்நாடகத்தில்தான் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது. இதற்கு முக்கிய காரணம் எடியூரப்பாதான். கர்நாடகாவில் பாரதிய ஜனதா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எடியூரப்பா.

கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சித்தராமையா இருக்கிறார். மாநிலத்தில் வரும் ஆண்டு ஆரம்பத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்கு மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது. இதனையொட்டி கர்நாடகத்தில் பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாதான் என்று அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா அறிவித்துள்ளார். ஆனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலானது வெற்றியை பாதித்து விடுமோ என்று கட்சி மேலிடம் வருத்தத்தில் உள்ளது.

மேலும் மாநில பாரதிய ஜனதா தலைவராக உள்ள எடியூரப்பா, அடுத்த முதல்வர் அமீத்ஷாதான் என்று அறிவித்திருப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்கள் தனியாகவும் ரகசியமாகவும் கூடி பேசி வருகிறார்கள். அதோடுமட்டுமல்லாது எடியூரப்பாவை அழைக்காமல் கட்சி கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிருப்பதியாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள கட்சியின் மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கடும் குற்றச்சாட்டை எடியூரப்பா மீது சுமத்தியுள்ளார். எடியூரப்பா இஷ்டம்போல் செயல்படுகிறார் என்றும் அவர் நோக்கத்தின்படி கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறார் என்றும் கட்சியின் விசுவாசிகளையும் பாதுகாவலர்களையும் அவர் கலந்தாலோசிப்பதில்லை என்று ஈஸ்வரப்பா குற்றஞ்சாட்டியுள்ளார்.

உட்கட்சி பூசலுக்கு காரணம் கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ்தான் காரணம் என்றும் எடியூரப்பா குற்றஞ்சாட்டியுள்ளார். இவர் மாநில கட்சி விவகாரத்தில் அதிகம் தலையிடுகிறார் என்றும் எடியூரப்பா நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு கூட்டத்தில் பேசிய ஈஸ்வரப்பா, தனிநபர் முக்கியம் அல்ல. முதலில் தேசம், இரண்டாவது கட்சி. அதன் பின்னர்தான் தனிநபர் என்று எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் எங்களுக்கு கற்பித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். கர்நாடக பா.ஜ. தலைவரும் வருங்கால முதல்வரும் எடியூரப்பாதான் என்று அமீத்ஷா அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேசமயத்தில் எடியூரப்பா தன் இஷ்டம் போல் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் ஈஸ்வரப்பா மேலும் கூறியுள்ளார்.

மாநில பா.ஜ.க.வில் தலைவர்களிடையே மோதல் போக்கு அதிகரித்து இருப்பதற்கு கட்சி மேலிடம் கவலை அடைந்துள்ளது. தென்னிந்தியாவில் கடந்த 2008-முதல் 13 வரை கர்நாடாகவில்தான் முதன் முதலாக பாரதிய ஜனதா ஆட்சி இருந்தது. ஆனால் அப்போது கட்சியில் மோதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 3 முதல்வர்கள் மாற்றப்பட்டனர். அதன்பின்னர் வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்று மேலிடம் கருதுகிறது. தலைவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டிருப்பதால் கட்சியின் வெற்றி பாதிக்குமோ என்ற கவலை மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்