முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களின் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

 

தமிழக முதலமைச்சர் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (28.04.2017) சேலம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் தமிழக முதல்வர் பேசியதாவது.தமிழக அரசால் தமிழக மக்களுக்கு பல்வேறு துறைகளின் மூலம் எண்ணற்ற பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்களை எல்லாம் தமிழக மக்கள் பயன்பெரும் வகையில் கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு அரசு அலுவலர்களின் கையில் தான் உள்ளது. எனவே இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வுக்கூட்டம்

குறிப்பாக, தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. பருவ மழை போதிய அளவு நமது மாவட்டத்திற்கு கிடைக்கப்பெறவில்லை. இந்த சூழ்நிலையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விவசாய உற்பத்தி மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அலுவலர்கள் முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும்.மேலும் போதிய மழை இல்லாத காரணத்தால் குடிநீர் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு குடிநீர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்பொழுது கோடைகாலம் என்பதால் அதிக அளவிலான தண்ணீர் தேவைப்படும் என்பதை கருதில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தங்குதடையில்லாமல் வழங்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு குடிநீர் திட்ட பணிகளின் வாயிலாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தண்ணீர் தேவை தற்போதை சூழ்நிலையில் அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் குறைந்துள்ளதால் கிணறிலிருந்து எடுத்து பயன்படுத்தப்படும் நீர் இல்லாத காரணத்தால் முழுவதும் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். பொதுமக்களின் தேவையை உணர்ந்து போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்வதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மிக முக்கியமாக ஊராட்சி ஒன்றியங்களில் ஆழ்துழாய் கிணறுகள் பழுது பட்டிருந்தால் அவற்றை சரி செய்து குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அம்மா அவர்களின் கனவு திட்டமான குடிமராமத்து பணி திட்டம் தமிழகத்தில் சிறப்பான செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் முக்கியமான திட்டமாக குடிமராமத்து பணி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து ஊர்களிலும், கிராமங்களிலும் உள்ள ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, அதன் கரைகள் பலப்படுத்தப்பட்டு, கிடைக்கும் மழைநீரை ஓரு சொட்டு கூட வீணாக்காமல் சேமித்து அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த குடிமராமத்து பணிகளை அரசு அலுவலர்கள் தரமாகவும், விரைந்தும் செய்திட வேண்டும். என பொதுப்பணித்துறை அலுவலர்களை கேட்டுக்கொள்கிறேன்.

அதே போன்று ஏரியில் தூர்வாரப்பட்ட வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் சாகுபடி காலங்களில் விவசாய நிலங்களின் விளைச்சல் அதிகரிக்கிறது. தண்ணீர் அதிக அளவில் ஏரி, குளங்களில் சேமிக்கப்படுகிறது.அதே போல மருத்துவத்துறையை பொறுத்தவரை கிராம மருந்துவ மனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவைகள் மருந்துவர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சேவை மனப்பான்மையுடன் உரிய சிகிச்சையினை சிறப்பாக வழங்கி, பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சுகாதார சீர்கேடுகள் ஏற்படாத வகையில் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தி தங்கள் பகுதிகளை குப்பை இல்லாத தூய்மையான பகுதிகளாக திகழ செய்ய அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் முதன்மை செயலாளர் சிவ்தாஸ்மீனா, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலர் முகமது நசிமுத்தின், , கலெக்டர் வா.சம்பத், , சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.காமராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், எஸ்.ராஜா, பி.மனோண்மணி, எஸ்.வெற்றிவேல், அ.மருதமுத்து, ஆர்.எம்.சின்னதம்பி, கு.சித்ரா மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.கவிதா மற்றும் அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்