முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 33-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்திடம் போராடி தோற்றது பஞ்சாப் அணி

சனிக்கிழமை, 29 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி போராடி தோற்றது. இந்த வெற்றி மூலம் ஐதராபாத் அணி 5-வது வெற்றியை பெற்றது.

இஷாந்த் சர்மா

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மொகாலியில் நடந்த 33-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. பஞ்சாப் அணியில் சந்தீப் ஷர்மா, நடராஜன், அம்லா (காயம்), ஸ்டோனிஸ் ஆகியோர் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக மார்ட்டின் கப்தில், மோர்கன், அனுரீத்சிங், இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டனர்.

ஐதராபாத் பேட்டிங்

டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல், முதலில் ஐதராபாத்தை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி ரன் மழை பொழிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் டேவிட் வார்னரும், ஷிகர் தவானும், பஞ்சாப்பின் பந்து வீச்சை பின்னியெடுத்தனர். 9.1 ஓவர்களில் 100 ரன்களை கடக்கும் அளவுக்கு ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது.

வார்னர்-தவான் அதிரடி

ஸ்கோர் 107 ரன்களாக உயர்ந்த போது வார்னர் 51 ரன்களில் (27 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), மேக்ஸ்வெல்லின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். தவான் 77 ரன்களில் (48 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த யுவராஜ்சிங் (15 ரன், 12 பந்து) நிலைக்காவிட்டாலும் கனே வில்லியம்சன் நொறுக்கித் தள்ளினார். அவரது அரைசதத்தின் உதவியுடன் ஐதராபாத் அணி 200 ரன்களை கடந்தது.

208 ரன் இலக்கு

20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் 54 ரன்களுடனும் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹென்ரிக்ஸ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 4 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கினார். இந்த சீசனில் விளையாடிய 4 ஆட்டங்களிலும் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

வோரா 3 ரன்

இதையடுத்து 208 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி ஆடியது. அறிமுக வீரர் மார்ட்டின் கப்தில் (23 ரன்), மனன் வோரா (3 ரன்), கேப்டன் மேக்ஸ்வெல் (0) ஆகியோர் சீக்கிரம் நடையை கட்டினாலும், ஷான் மார்ஷ் நிலைகொண்டு விளையாடி அணியை ஆபத்தான சூழலில் இருந்து மீட்டெடுத்தார். அவருக்கு மோர்கன் (26 ரன்) ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார்.

மார்ஷ் அதிரடி

ஷான் மார்ஷ் ஆடிய விதத்தை கண்டு ஒரு கட்டத்தில் ஐதராபாத் வீரர்கள் பதற்றத்திற்குள்ளானார்கள். பிறகு ஒரு வழியாக ஷான் மார்சின் (84 ரன், 50 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட்டை புவனேஷ்வர்குமார் கபளகரம் செய்தார். அத்துடன் பஞ்சாப்பின் நம்பிக்கை தகர்ந்தது. அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

பஞ்சாப் தோல்வி

20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 9 விக்கெட்டுக்கு 181 கன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் நெஹரா, சித்தார்த் கவுல் தலா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். 9-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது 5-வது வெற்றியாகும். இந்த சீசனில் அந்த அணி வெளியூரில் பதிவு செய்த முதல் வெற்றி இது தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்