முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் 5 - ம் தேதி மாபெரும் இளைஞர் பெருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை,- அ.தி.மு.க.ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் வருகிற 5 - ம் தேதி மாபெரும் இளைஞர் பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் 25,000 இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.

அ.தி.மு.க.நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஜெயலலிதாவின் 69 - வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சார்பில் மாபெரும் இளைஞர் பெருவிழா மதுரை பாண்டிகோவில் அருகே ரிங்ரோடு அம்மா திடலில் வருகிற 5 - ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு 25 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் வழங்குகிறார்.

இதனையொட்டி இந்த விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. முன்னதாக பாண்டிகோவில் அம்மா திடலில் இவ்விழாவிற்கு பூமிபூஜையுடன் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. வேதவிற்பனர்கள் மந்திரங்கள் ஓதினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் முகூர்த்தகாலை அ.தி.மு.க.பொருளாளரும், வனத்துறை அமைச்சருமான திணடுக்கல் சீனிவாசன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் முகூர்த்தகாலை நட்டனர். இதனை தொடர்ந்து விழாவிற்கான பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ, பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான், நீதிபதி, மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் பி.அய்யப்பன், மாநில சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, முன்னாள் சேர்மன் தமிழழகன், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், பகுதி கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், தி.கோபி, வண்டியூர் முருகன், மாணவரணி செயலாளர் ஏ.ராஜூவ்காந்தி, முன்னாள் கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர், நூர்முகமது, வக்கீல் ஒத்தக்கடை சேகர், அய்யர்பங்களா கருப்பணன், மானகிரி மகாதேவன், வட்ட செயலாளர்கள் மகேஷ், ஏ.முத்துச்சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் அ.தி.மு.க.அம்மா பேரவை சார்பில் நடைபெறும் மாபெரும் இளைஞர் பெருவிழா மெகா யூத் பெஷ்டிவெல் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அது குறித்த பிரச்சார வாகனத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று துவக்கி வைத்தார். இந்த வாகனம் மதுரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று இந்த இளைஞர் பெருவிழா பற்றிய பிரச்சாரத்தை ஒலி பெருக்கி மூலம் மேற்கொள்ளும்.

இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆரன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் அம்மாவின் 69 - வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பில் மாபெரும் இளைஞர் பெருவிழா மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் 5-5-2017 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெறுகிறது. இந்த இளைஞர் பெருவிழாவில் 100 - கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் 100 நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறுகிறது. இதில் 10,000 இளைஞர்கள் பங்கேற்கின்றனர் .

மேலும் உலகளவிலும், தேசிய அளவிலும், மாநிலஅளவிலும், மாவட்ட அளவிலும் விளையாட்டுத்துறையில் தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் உட்பட 25,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 5 - ம் தேதி மாலையில் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ, பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி, மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக ரீதியில் செயல்பட்டு வரும் 50 மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

சித்திரை பெருவிழா எப்படி மதுரைக்கு புகழ்பெற்றது போல் இந்த இளைஞர் பெருவிழா மதுரை மக்களுக்கு ஒர் பயனுள்ள விழாவாக அமையும். மக்களைத்தேடி அரசு என்று நிர்வாகத்தை அம்மா உருவாக்கினார். தற்போது அம்மாவின் வழியில் மக்களைத்தேடி முதலமைச்சர் வருகிறார். எனவே இந்த இளைஞர் பெருவிழா ஒரு சித்திரை திருவிழாவை போல நடைபெறுகிறது. எனவே இந்த விழாவில் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்