முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக நாட்டுப் படகு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

திங்கட்கிழமை, 1 மே 2017      உலகம்
Image Unavailable

தலைமன்னார்  - தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.  தமிழகம் மற்றும் புதுவை கிழக்கு கடற்கரைக் பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 அன்று துவங்கியது. மே 29 வரை 45 நாட்கள் தமிழகத்திலும், மே 31 வரையிலும் 47 நாட்களும் புதுவை மாநிலத்திலும் இந்த தடை அமலில் இருக்கும். இந்த மீன்பிடித் தடைக்காலத்தில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் 15000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் ஆழங்குறைந்த பகுதிகளில் ஓய்வெடுக்கத் துவங்கியுள்ளன. ஆனால் வழக்கம் போல நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் அருகே பாம்பனில் இருந்து நேற்று முன்தினம்  மாலை 60-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று  அதிகாலை நாட்டுப்படகு மீனவர்கள் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாட்டுப்படகு ஒன்றினை கைப்பற்றி அதிலிருந்த அபிஷேக், ஆரோக்கியம், சத்தியமிக்சன், ராஜகுனசேகரன், அந்தோனி ஆகிய 5 மீனவர்களை எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்தாகக் கூறி சிறைபிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் தாழ்வுபாடு கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்கு பின்னர் மன்னார் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. இதுவரை, விசைப்படகு மீனவர்களை குறிவைத்து சிறைப்பிடித்து வந்த இலங்கை கடற்படையினர், தற்போது, நாட்டுப்படகு மீனவர்களை சிறைபிடித்து இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்