முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பெரிய நாயகிசத்திரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் : கலெக்டர் டாக்டர் பழனிசாமி முன்னிலையில் நடந்தது

திங்கட்கிழமை, 1 மே 2017      திருச்சி

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் பெரியநாயகிசத்திரம் ஊராட்சியில் கிராமசபைக்கூட்டம் மாவட்டகலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, முன்னிலையில் நடைபெற்றது.

404 ஊராட்சிகள்

மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 404 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நேற்று (01.05.2017) நடைபெற்றது. மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், பெரியநாயகிசத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர் பேசியதாவது: கிராம மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் சிறந்த தளமாக விளங்குகிறது. மக்களின் பிரச்சினைகள் குறித்து தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்து கொள்வது இதன் சிறப்பம்சமாகும்.

கிராமப்புற மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும், அரசுத் திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்யவும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து முடிவு செய்யவும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அரசின் திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொண்டு பயன் பெறவேண்டும். அரசுத்திட்டங்களை பெறுவதற்கு யார் யாருக்கு தகுதியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் கிராமசபைக் கூட்டம் பயன் உள்ளதாக உள்ளது. கிராம வளர்ச்சிக்கும் சமுதாய வளர்ச்சிக்கும் உதவும் அரசுத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதை கிராமசபைக் கூட்டங்கள் உறுதிப்படுத்துகின்றது.

கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பிற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. மாணவ, மாணவியர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி நல்லமுறையில் படித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பிரசவங்கள் இலவசமாக பார்ப்பதுடன் அவர்களுக்கு உதவித்தொகையாக ரூபாய் 18 ஆயிரம் அரசு வழங்குகிறது. அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர்சிகிச்சை தேவைப்படுவோர்க்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் அனைத்து வகையான சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.

முதியோர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் மாதம் ரூபாய் 1000 உதவித் தொகை வழங்கப்பட்டுவருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தப்பட்டு உரிய ஊதியங்கள் உடனுக்குடன் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது.கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு வங்கிகடன் உதவியும் தொழில் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற அரசு திட்டங்களை தெரிந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெற வேண்டும். கிராமங்களை அங்கு வசிக்கும் மக்கள் தூய்மையாக பராமரிப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு ஒத்துழைத்து மக்கும் குப்பை மக்காத குப்பை ஆகியவற்றை சேகரிப்பதற்கும் உதவ வேண்டும். திறந்தவெளி மலம் கழிப்பதை முற்றிலுமாக தவிர்த்து அரசின் தனிநபர் கழிப்பறை திட்டத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் அப்பொழுது தான் கிராமங்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் நோய் தொற்றுகள் ஏற்படாது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பேசினார்.

கிராமசபைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, செயற்பொறியாளர் அனுராதா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்வகணபதி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளாச்சி) லதா, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஏ.ஜி.ராஜராஜன், மகளிர்திட்டம் உதவி திட்ட அலுவலர் காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், லதா, வட்டாட்சியர் சண்முகராஜசேகரன் மற்றும் ஏராளமான கிராமக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்