முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட்டில் ஆம்புலன்ஸ்,கிரேன்,ரோந்துவாகன வசதிகள் திடீர் மாயம்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் நான்கு வழிச்சாலை டோல்கேட் சார்பில் இயக்கப்பட்டு வந்த ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகன வசதிகள் அனைத்தும் திடீரென்று மாயமாகி விட்டது.விபத்து காலங்களில் மிகவும் உதவிகரமாக இருந்து வந்த இந்த வசதிகளை மீண்டும் செயல்படுத்திட மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையில் கப்பலூர் கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக இயக்கப்பட்டு வரும் டோல்கேட் செயல்பட்டு வருகிறது.தென்மாவட்டங்களுக்கு நுழைவு வாயிலாக திகழ்ந்திடும் இந்த கப்பலூர் டோல்கேட் வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கமான ஒன்றாகும்.இந்நிலையில் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் தொடங்கி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் இலக்கு வரையில் உள்ள சாலை கப்பலூர் டோல்கேட்டின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வளையத்தில் வருகிறது.தினமும் பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் பயணிப்பதன் மூலம் கப்பலூர் டோல்கேட் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில் தனது எல்கைக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலையை பராமரிப்பதில் டோல்கேட் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.குண்டும் குழியுமான சாலைகள்,செயல்படாத உயர்கோபுர மின்விளக்குகள்,விபத்துகளால் சாலையில் சிதறிக் கிடக்கும் கண்ணாடிச் சில்லுகள்,பராமரிக்கப்படாததால் மண்மேடாகி கிடக்கும் சாலைகள்,தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாததால் சாலையில் சிதறியிருக்கும் குப்பைகள் என எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கப்பலூர் டோல்கேட் நிர்வாகத்தில் எல்லைக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலை நரக வழிச்சாலையாக மாறிக் கிடக்கிறது.

இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் சமயத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிட ஆம்புலன்ஸ் வாகனம்,விபத்தில் நொறுங்கி கிடக்கும் வாகனங்களை மீட்டு அப்புறப்படுத்திட ராட்சத கிரேன் மற்றும் சாலை பராமரிப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்திட ஹைவே பேட்ரோல் எனப்படும் ரோந்து வாகனம் ஆகியவை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சார்பில் 24மணி நேரமும் இயங்கி வந்தது.இதன் மூலம் விபத்துகளில் சிக்குவோருக்கு உடனடி மருத்துவ உதவியும்,விபத்தில் சிக்கும் வாகனங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பும் வெகுவாக குறைந்து இருந்தது.இதனிடையே கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக கப்பலூர் டோல்கேட் சார்பில் இயக்கப்பட்டு வந்து ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகனங்கள் திடீரென்று தங்களது சேவையை நிறுத்தி விட்டு மாயமாகிவிட்டது.இதன் காரணமாக திருமங்கலம் பகுதி நான்குவழிச் சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.தற்போது திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்திடும் விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றிட அரசின் 108 இலவச ஆம்புலன்சுகள் மட்டுமே பயன்படுத் தப்பட்டு வருகிறது.

கப்பலூர் டோல்கேட் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகளின் உடந்தை போன்ற காரணங்களால் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டிருந்த ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகனங்கள் மாயமாகி விட்டதாக வாகனஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே மாபெரும் விபத்து எற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதற்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன.ராதாகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு கப்பலூர் டோல்கேட்டில் ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகன வசதிகளை மீண்டும் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கப்பலூர் டோல்கேட்டை அடிக்கடி கடந்து சென்றிடும் மத்திய அமைச்சர் இதனை கவனிப்பாரா? 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்