கோயம்பேடு - நேருபூங்கா வரை மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் நவீன குளிர்சாதன வசதிகள்

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      சென்னை

கோயம்பேடு-நேருபூங்கா வரையிலான மெட்ரோ சுரங்க ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக நவீன குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

8 கிலோ மீட்டர்

சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பயணிகளின் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக கோயம்பேடு முதல் - ஆலந்தூர், விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.2-வது கட்டமாக கோயம்பேடு-நேரு பூங்கா வரையில் 8 கிலோ மீட்டர் தூரம் பூமிக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு ரெயில் சேவை தொடங்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டன.

 கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரையில் உள்ள ரெயில் நிலையங்கள் நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக உயர்தர, நவீன எந்திரங்கள் மூலம் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட உள்ளன.இது குறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

 மெட்ரோ சுரங்க பாதை ரெயில் தரை மட்டத்தில் இருந்து 17 மீட்டர் ஆழத்தில் செல்லுகிறது. பயணிகள் டிக்கெட் எடுத்து செல்வதற்காக 8 மீட்டர் கீழே டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது.பூமிக்கு கீழே வெப்ப நிலையை சரி செய்வதற்காகவும் பயணிகளின் வசதிக்காகவும் அந்த பகுதிகள் முற்றிலும் குளுரூட்டப்படுகிறது. சென்னையில் தற்போது வெயில் அளவு 104 டிகிரிக்கு மேல் சென்று விட்டது. இதனால் பயணிகளுக்கு புழுக்கம், மூச்சு முட்டல் ஏற்படாமல் இருப்பதற்காக பல கட்டமாக ஆய்வு செய்து காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.சுரங்க ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் வெப்ப அளவுகளை கணக்கிடும் வெப்பமானி கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது. வெப்ப அளவு எவ்வளவு உள்ளது என்பது அங்குள்ள எலக்ரானிக் திரையில் தெரியும்.சென்னை மெட்ரோ சுரங்க ரெயில் தண்டவாள பகுதியில் பயணிகள் தவறி விழுந்து விடாமல் இருக்க முன்எச்சரிக்கை கருவிகள் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரெயில் நிலைய நவீன குளிர்சாதன இயந்திரங்கள் அனைத்தும் இங்கிலாந்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொறுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: