முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அரசு - ராணுவம் மீண்டும் மோதல் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவசர ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 2 மே 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தான் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது அமைச்சரவை சகாக்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.  பாகிஸ்தானில் ஜனநாயக அரசு பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது. அந்த நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை ஆட்சி, அதிகாரத்தில் ராணுவமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பலமுறை ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.  இந்தப் பின்னணியில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானின் முன்னணி ஊடகமான ‘டான்’ நாளிதழில் ஒரு செய்தி வெளியானது. குறிப்பிட்ட சில தீவிரவாத குழுக்களுக்கு ராணுவம் ஆதரவு அளித்து வருகிறது. அதற்கு பிரதமர் நவாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராணுவத்துக்கும் அரசுக்கும் இடையே பல்வேறு மோதல்கள் நடைபெற்று வருகின்றன என்று அந்த செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிறப்பு கமிட்டி விசாரணை நடத்தியது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸின் வெளியுறவு விவகார ஆலோசகர் தாரிக் பத்தேமி, டான் நாளிதழ் நிருபருடன் தகவல்களை பகிர்ந்து கொண்டிருப்பது கமிட்டியின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாரிக் பத்தேமி மற்றும் மூத்த அரசு அதிகாரி ராவ் தெசின் அலி ஆகியோர் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக டான் நாளிதழுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அரசின் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் திருப்தி அடையவில்லை. நவாஸ் ஷெரீப் அரசு உண்மைகளை மூடி மறைக்கிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது என்று பாகிஸ்தான் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி காமர் ஜாவித் பத்வா அரசுத் தரப்பிடம் கடும் கண்டனத்தை பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் தனது ட்விட்டர் பதிவில், அரசின் நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். பனாமா ஊழல் விவகாரத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் நவாஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ராணுவமும் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியிருப்பது நவாஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது. இதனிடையே உள்துறை அமைச்சர் சவுத்ரி அலி கான், நிதித்துறை அமைச்சர் இஸ்காக் தார் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் நவாஸ் கடந்த இரு நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் பாகிஸ்தானில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்