முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் விழா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

புதன்கிழமை, 3 மே 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -          அ.தி.மு.க.ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் நாளை இளைஞர் பெருவிழா நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு இளைஞர்களுடன் கலந்துரையாடுகிறார் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
                 அ.தி.மு.க.நிறுவனர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஜெயலலிதாவின் 69 - வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சார்பில் மாபெரும் இளைஞர் பெருவிழா மதுரை பாண்டிகோவில் அருகே ரிங்ரோடு அம்மா திடலில் நாளை 5 - ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு 25 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
             இந்த விழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
           எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் அம்மாவின் 69 - வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார்பில் மாபெரும் இளைஞர் பெருவிழா மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நடைபெறுகிறது. இந்த இளைஞர் பெருவிழாவில் 100 - கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழர் பாரம்பரிய பண்பாட்டு கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வண்ணம் 100 நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமும் நடைபெறுகிறது. இதில் 10,000  இளைஞர்கள் பங்கேற்கின்றனர் .
           மேலும் உலகளவிலும், தேசிய அளவிலும், மாநிலஅளவிலும், மாவட்ட அளவிலும் விளையாட்டுத்துறையில் தேர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் உட்பட 25,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பரிசுகள் ஆகியவற்றினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  நாளை மாலை வழங்குகிறார்.  
             முன்னதாக நாளை காலை 8 மணி முதல் இந்த இளைஞர் பெருவிழா நடைபெறும் மைதானத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 8 ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த இளைஞர்களுக்கு அதே இடத்தில் தேர்வு செய்யப்பட்டு 100 க்கும் மேற்பட்ட  நிறுவனங்களால் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் இந்த விழாவில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கரகாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைத்திறன் போட்டிகளும் நடக்கிறது. இந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
           இந்த இளைஞர் பெருவிழாவில் கலந்து கொள்ளும் இளைஞர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை பகல் 1 மணியளவில் கலந்து கொண்டு கலந்துரையாடல் நடத்துகிறார். அதனை தொடர்ந்து அதே இடத்தில் இளைஞர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார். மக்களை தேடி அரசு என்ற தாரக மந்திரத்தோடு செயல்பட்டு அ.தி.மு.க.அரசு இன்றைக்கு மக்களை தேடி முதல்வர் என்ற நிலையில் இங்கு வருகிறார். இதனை தொடர்ந்து மாலையில் நடைபெறும் விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள், கேடயங்கள், 25 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.      கலைத்திறன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2 ம் பரிசாக ரூ.50,ஆயிரமும், 3 ம் பரிசாக ரூ.40 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 5 ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. மேலும் கிராம, மாநில, மாவட்ட தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு  இலவச சீருடைகள், பதக்கங்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மாற்றுதிறனாளி வீரர்களுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது.
           இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ, பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி, மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழக ரீதியில் செயல்பட்டு வரும் 50 மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
               சித்திரை பெருவிழா எப்படி மதுரைக்கு புகழ்பெற்றது போல் இந்த இளைஞர் பெருவிழா மதுரை மக்களுக்கு ஒர் பயனுள்ள விழாவாக அமையும். மக்களைத்தேடி அரசு என்று நிர்வாகத்தை அம்மா உருவாக்கினார். தற்போது அம்மாவின் வழியில் மக்களைத்தேடி முதலமைச்சர் வருகிறார். எனவே இந்த இளைஞர் பெருவிழா ஒரு சித்திரை திருவிழாவை போல நடைபெறுகிறது. எனவே இந்த விழாவில் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் . இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்