முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ச ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 3 மே 2017      திருப்பூர்
Image Unavailable

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், அவிநாசியில் அமைந்துள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் சஜெயந்தி   தலைமையில் நடைபெற்றது.

தேர்திருவிழா

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் அமைந்துள்ள அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழா 30.04.2017 முதல் 11.05.2017 வரை சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.   07.05.2017 மற்றும் 08.05.2017 ஆகிய நாட்களில்  தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு இந்த திருக்கோயில்களுக்கு பெருமளவில் பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மேற்படி விழாவின் போது எவ்வித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்குவதுடன் இவ்விழாவின் போது கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக ஓர் ஒழுங்கு வரிசை ஏற்படுத்தி தேவைக்கேற்ப காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரை பணியில் அமர்த்தி சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல். மேற்படி விழாவின் போது கோயில்களுக்கு வாகனங்களில் வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த போதிய அளவில் இடவசதி செய்தல். மேலும், வாகன போக்குவரத்தினை மாற்றி அமைப்பது தொடர்பாகவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திடவும்

மேலும், தேர் திருவிழாவின் போது கோயில்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திடவும், திருக்கோயிலில் பக்தர்கள் கூடுகின்ற அனைத்து இடங்களையும் சுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேரோடும் வீதிகளை செப்பனிட்டும், பாலசந்தர் மருத்துவமனை மற்றும் தேரோடும் வீதிகளில் உள்ள மரக்கிளைகளை வெட்டி விட நடவடிக்கை மேற்கொள்ளல்.  தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்தல், திருக்கோயில் வளாகத்தில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகள் ஆங்காங்கே வைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய தற்காலிகமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தேவையான கழிப்பறைகள் தனித்தனியாக அமைத்தல் மற்றும் தேவையான குப்பைத்தொட்டிகள்  வைக்க வேண்டும்.  அப்பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் ஆக்கிரமணம் ஏற்படாது, காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து கண்காணித்தல். மேலும், திருக்கோயில்களை சுற்றியுள்ள வீதிகளில் போதிய அளவு மின் விளக்குகள் மற்றும் குடிநீர் வசதிகள் மேற்கொள்ளல். திருக்கோயில்களை சுற்றியுள்ள தெருக்களை பேரூராட்சி அலுவலர்கள்  செப்பனிடுதல் வேண்டும். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் கோவிலுக்கு சிரமமின்றி வந்திட ஏதுவாக, சூழ்நிலைக்கேற்ப தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்கிட போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சுகாதாரம் பேணுதல்

மருத்துவம் மற்றும் பொது சுகாதார துறையினர் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் பொது சுகாதாரம் பேணுதல் மற்றும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவு மருந்துகள் இருப்பு வைப்பதோடு, மருத்துவர்கள் உட்பட அனைத்து பணியாளர்களும் பணியில் இருப்பதை உறுதிபடுத்திக் கொள்ளல். தேரோட்டத்தின் போது உரிய மருத்துவர்கள் குழுவினருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம்  ஒன்று உடன் சுற்றி வரவேண்டும்.   தீ விபத்து ஏற்படாமல் தடுத்திடும் நோக்கில் தீயணைப்பு வாகனம் ஒன்று தயார் நிலையில் தண்ணீருடன் கோயில்களுக்கு அருகில் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் இருக்க  வேண்டும்.

மின்தடை ஏற்படா வண்ணம்

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்கள் 30.04.2017 முதல்11.05.2017 வரை அப்பகுதியில் மின்தடை ஏற்படா வண்ணம் உரிய ஏற்பாடுகள் செய்தல். தேரோட்டத்தின் போது ரதவீதிகளில் குறுக்காகச் செல்லும்  மின்கம்பிகளை தற்காலிகமாக தளர்த்திக்கொடுக்க வேண்டும். தேரோட்டம் முடிந்ததும் மீண்டும் மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.  இத்தேர்திருவிழாவிற்கு பெருமளவில் மக்கள் கூட வாய்ப்புள்ளது என்பதால், அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்சார கம்பிகள் உறுதி தன்மையை தணிக்கை செய்து எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழா வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெடுஞ்சாலைத்துறையினர் தேரோடும் வீதிகளில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படவேண்டும் மற்றும் தேரோடும் சாலைகளில் உள்ள குழிகளை தார் போட்டு நிரப்பி செப்பனிட்டு மராமத்து பணிகள் செய்ய வேண்டும்.    தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு இடையே கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்யும் வகையில்  உரிய மூங்கில் தடுப்புகளை பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறையினருடன் இணைந்து  இந்து சமய அறநிலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.  பொதுமக்களுக்கு  எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்ய  உரிய  அனைத்து ஏற்பாடுகள் செய்தல் மற்றும் அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டும்.

மேலும், திருப்பூர் உதவி கலெக்டர்  அனைத்து துறை சார்ந்த பணிகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு மேற்படி அவிநாசி அருள்மிகு அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழாவினை சீரிய முறையில் நடத்திட அனைத்து அலுவலர்களும் சிறப்பான முறையில்  செயல்பட வேண்டும் என  மாவட்ட கலெக்டர்  அறிவுறுத்தினார்கள்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பெ.வெங்கடாசலம் , இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஹர்சினி, இணை இயக்குநர் பொது சுகாதாரம் மரு.விஜயகுமார், அவிநாசி வட்டாட்சியர் விவேகானந்தன்,  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்