முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம நீர்வரத்து கால்வாயில் கற்பாறை தடுப்பணை கட்டும் பணி: தி. மாவட்டம்முதல் இடம் வகிக்கிறது

சனிக்கிழமை, 6 மே 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றியம், புளியரம்பாக்கம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஓடையின் குறுக்கே கற்பாறை தடுப்பணை கட்டும் பணிகளை கலெக்டர் பிரசாந்த் மு. வடநேரே, செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி.கே.மோகன் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளில், பணியாளர்களுடன் சேர்ந்து தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டார்கள். கட்டுமானப் பணிகளில் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருடன் சேர்ந்து தங்களையும் ஈடுபடுத்திக்கொண்டனர்.

முதலிடம்

திருவண்ணாமலை மாவட்டம் கடும் வறட்சியின் பிடியில் சிக்குண்டுள்ளது. வறட்சி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சமாளிக்க தமிழ்நாடு அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குடிநீர் தட்டுபாட்டை போக்கும் வகையில் பல்வேறு குடிநீர் திட்டப் பணிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அளவு பெருமளவிற்கு குறைந்துள்ளது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கிட போர்கால அடிப்படையில் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சில இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 900 அடிகளுக்கும் கீழ் சென்றுவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வட்டாரங்கள் அனைத்தும் தீவிரமாகவோ, அதிதீவிரமாகவோ அல்லது அளவிற்கதிகமாக நிலத்திடி நீர் சுரண்டபட்ட நிலையிலே தான் உள்ளன. எந்த வட்டாரத்திலும் நிலத்தடி நீர் மட்டம்; பாதுகாப்பான அளவில் இல்லை. எனவே ஓடும் நீரை மெதுவாக நடக்க வைக்கனும். நடக்கும் நீரை ஒரிடத்தில் தேக்கி வைக்கனும். தேக்கி வைக்கும் நீரை நிலத்தினுள் கசிந்து செல்ல வேண்டும். எதிர்வரும் மழையை தன்னியல்பாக தேக்கி நம் மகிழ்வான வாழ்விற்கு போதுமான நிலத்தடி நீரை மழையானது விட்டு செல்வதற்காக அதனை முறையாக வரவேற்பது உறுதி செய்வதும் நமது கடமையாகும்.

எனவே, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த "தண்ணீர் - தண்ணீர்" என்ற இயக்கத்தை துவக்கி போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஊரக வளர்ச்சி துறை, வேளாண் பொறியில் துறை மற்றும் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை ஆகியவற்றின் தொழிற்நுட்ப குழுக்கள் இதற்கான அடிப்படை பணிகளை முழுமூச்சுடன் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறு கற்பாறைகளை கொண்டு கேபியான் தடுப்பணைகளும், செறிவூட்டு குழிகள் மாவட்டம் முழுவதும் கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1037 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 910 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக தடுப்பணைகள் 2017-18 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு, திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது.

மேற்கண்ட, நீராதாரங்களை பெருக்குவதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் முழுமையடைவதற்கு முதன்மை பங்குதாரர்கள் பொதுமக்கள்தான். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், விவசாயிகள், அவர் தம் பங்கேற்பை அளிப்பதன் மூலமாக மேற்கண்ட பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் தனது சிறு பங்களிப்பை அளிக்கும் விதமாய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இரண்டு மணி நேரம் இப்பணிகளில் தனது உடல் உழைப்பை கலெக்டர் வழங்கி வருகிறார். கடந்த மாதம் 4ந் தேதி அன்று ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம், குட்டைக்கரை ஊராட்சி, தும்பக்காடு கிராமம், ஜவ்வாது மலை அடிவாரத்திலும், கடந்த 8ந் தேதி அன்று தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், கீழ்சிறுபாக்கம் கிராமம், புதூர் பகுதியிலும், 15ந் தேதி அன்று கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம், தென்பள்ளிப்பட்டு கிராமத்திலும், 22ந் தேதி அன்று புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், முத்தனூர் கிராமத்திலும், 29ந் தேதி அன்று கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஜமீன்கூடலூர் கிராமத்திலும் கலெக்டர் ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளில் 2 மணி நேரம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இப்பணிகளில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்