மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டனர்

சனிக்கிழமை, 6 மே 2017      ஈரோடு
erode School-vehicles-carrying-students--Collector-no2

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிக்கூடங்களில் மாணவ–மாணவிகளை ஏற்றிச்செல்ல பஸ் மற்றும் வேன்கள் வைத்து உள்ளனர். இந்த வேன்களில் மாணவ–மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றிச்செல்ல தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படுவதை ஆண்டுதோறும் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூட வாகனங்களை சோதனை செய்யும் முகாம் நேற்று நடந்தது.ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய வட்டார அலுவலகங்களுக்கு உள்பட்ட பள்ளிக்கூட வாகனங்கள் அனைத்தும் ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்துக்கு சோதனைக்காக கொண்டு வரப்பட்டன.

கலெக்டர் பார்வையிட்டார்

இந்த வாகனங்களை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.வாகனங்களின் கட்டமைப்பு, அனுமதிக்கப்பட்ட நிறம், வாகனங்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளின் அளவு, அங்கீகரிக்கப்பட்ட வடிவம், அவசர காலங்களில் மாணவ–மாணவிகள் வெளியேறும் வாசல், பாதுகாப்பான, எளிதாக திறக்கவும், பூட்டவும் வசதியான கதவுகள், படிக்கட்டுகள், டிரைவர் உட்காரும் பகுதி, மாணவ–மாணவிகள் உட்காரும் இருக்கைகள் என்று அனைத்தும் அனுமதிக்கப்பட்ட அளவில் உள்ளனவா? என்பது குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சரிபார்த்தனர். புத்தக பைகள் வைக்கும் வசதி, ஜன்னல்கள் மற்றும் முதல் உதவிப்பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறதா? என்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

டிரைவர்களுக்கு ஆலோசனை

கலெக்டர் எஸ்.பிரபாகர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் ஆகியோர் பள்ளிக்கூட வாகன டிரைவர்களுக்கு வாகனம் ஓட்டும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கினார்கள்.இதுபோல் டிரைவர்களுக்கு தீயணைப்பு வீரர்கள் மூலம் தீத்தடுப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. ஆர்.நர்மதாதேவி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ்குமார் (டவுன்), சேகர் (போக்குவரத்து), இன்ஸ்பெக்டர் அருள், ஏ.ஈ.டி. பள்ளிக்கூட தாளாளர் காசியண்ணன், முதல்வர் முருகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

509 வாகனங்கள்

95 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 671 பஸ்கள் சோதனைக்கு கொண்டு வர வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் 509 வாகனங்கள் மட்டுமே சோதனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.இந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்ணன் (ஈரோடு கிழக்கு), ரகுபதி (ஈரோடு மேற்கு), வெங்கட்ரமணி (பெருந்துறை) ஆகியோர் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், முத்துசாமி, சதாசிவம், ராஜன் ஆகியோர் சோதனை செய்தனர். இதில் 60 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்கள் மற்றும் சோதனைக்கு கொண்டு வரப்படாத வாகனங்களை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கொண்டு வந்து சோதனை சான்று பெற்றுக்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்ஈரோடு மாவட்டம் முழுவதும்  192 பள்ளிக்கூடங்களில் இருந்து 826 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்: