சிறு கனிமங்களை அனுமதிக்கப்பட்ட அளவில் இலவசமாக எடுத்துச் செல்லலாம்: ஆட்சியர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 7 மே 2017      ஈரோடு

அரசு புறம்போக்கு ஏரி, குளங்களில் உள்ள சிறு கனிமங்களை வீடு, விவசாயப் பயன்பாட்டுக்கு உரிய அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட அளவில் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என ஆட்சியர் பிரபாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண், சவுடு மண், கரம்பை மண், சரள், களிமண் போன்ற சிறுகனிமங்களை உண்மையான விவசாயப் பயன்பாட்டுக்காகவும், வீட்டு உபயோகத்துக்காகவும், மண்பாண்டங்கள் செய்வதற்காகவும் குளங்கள், ஏரிகளிலிருந்து எடுத்துச் செல்வதற்கு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அனுமதி

அதன்படி, நஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு ஓர் ஏக்கருக்கு 75 கன
 மீட்டரும் (25 டிராக்டர் லோடு), புஞ்சை நிலம் வைத்துள்ள விவசாயி ஒருவருக்கு ஓர் ஏக்கருக்கு 90 கன மீட்டரும் (30 டிராக்டர் லோடு), வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கு நபர் ஒருவருக்கு 30 கன மீட்டர் அல்லது 5 லாரி லோடும் கனிமம் வெட்டி எடுத்துக் கொள்ளவும், மண்பாண்டங்கள் செய்யும் பயன்பாட்டுக்கு நபர் ஒருவருக்கு 60 கன மீட்டருக்கு மிகாமல் களிமண் எடுத்துச் செல்வதற்கும் அரசு அனுமதித்துள்ளது. மேலும், மண் எடுத்துச் செல்ல நபர் ஒருவருக்கு அனுமதி காலம் 20 நாள்களுக்கு மிகாமல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இலவசமாக

எனவே, ஈரோடு மாவட்ட அரசிதழில் (சிறப்பு வெளியீடு) வெளியிடப்பட்டுள்ள, வெளியிடப்படவுள்ள குளங்கள், ஏரிகள் அமைந்துள்ள வருவாய் கிராமம் அல்லது அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்புக்குள் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்று இலவசமாக வண்டல், கிராவல் மண்ணை விவசாயப் பயன்பாடு, வீட்டு உபயோகத்துக்காக எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: