முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

திங்கட்கிழமை, 8 மே 2017      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை  - மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.  மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி - அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 5-ம் தேதியும், திக் விஜயம் 6-ம் தேதியும் நடைபெற்றது.

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர். இந்த விழாவின் முத்தாய்ப்பாக நேற்று காலை தேரோட்டம் விமரிசையாக நடை பெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு மேஷ லக்கனத்தில் சுந்தரேசுவரர் - மீனாட்சி அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினர். தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் தேர்முட்டி வீதியில் திரண்டனர். சுவாமி - அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு தேர்வடம் பிடிக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

பெரிய தேரில் பிரியா விடையுடன் சுந்தரேசுவரரும், 2-வது தேரில் மீனாட்சி அம்மனும் மாசி வீதிகளில் பவனி வந்தனர். மாசி வீதிகள் பக்தர்கள் கூட்டத்தால் திணறியது. அந்த பகுதியில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றும் ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தை கண்டு களித்தனர். முன்னதாக விநாயகர், முருகன் சப்பரபவனி நடைபெற்றது. தேருக்கு முன்னதாக அலங்கரிக்கப்பட்ட யானை, ஒட்டகம் அழைத்துச் செல்லப்பட்டன. தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீனாட்சி - சுந்தரேசுவரர் பதிகம் பாடிச் சென்றனர். இதைதொடர்ந்து, நேற்று இரவு கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் மதுரையை நோக்கி சுந்தர்ராஜ பெருமாள் புறப்படுகிறார்.

அப்போது பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் முன்பாக சிறப்பு பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கு வையாழியாகி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் நேரிகம்பு, வளைதடியுடன் புறப்பட்டார். தொடர்ந்து வழியில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளிகிறார். இன்று மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். இன்று இரவு 12 மணிக்கு ஆண்டாள் சூடிகொடுத்த மாலையை அணிந்து பக்தர்களுக்கு சுவாமி சேவை சாதிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். நாளை காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருள்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்