முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் .இல.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவனங்கள் சார்பாக, செஞ்சி ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்கபூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமினை கலெக்டர் .இல.சுப்பிரமணியன், தொடங்கி வைத்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
3137 நபர்கள் பங்கேற்பு
இம்முகாமில், படித்த மற்றும் படிக்காத கிராமப்புறங்களைச் சேர்ந்த 18 வயது முதல் 35 வயது வரை உள்ள, 8-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, இளங்கலை மற்றும் முதுகலை போன்ற கல்வித்தகுதி பெற்ற ஆண், பெண் இருபாலரும் என 3137 நபர்கள் கலந்து கொண்டனர்.

70 தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு
இதில் 70 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. தனியார் நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் 953 நபர்கள் தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு பெற்றனர். தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் .இல.சுப்பிரமணியன், பணி நியமன ஆணையினை வழங்கி விழாப் பேருரையாற்றினார் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு பலதரப்பட்ட திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து பணி அமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கிராமப்புறத்தை சேர்ந்த படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றவாறு பல்வேறு தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து அந்நிறுவனங்களில் பணி வாய்ப்புகளை பெற்று தரும் நோக்கத்தோடு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழக முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் 22,000 நபர்கள் கலந்து கொண்டு 7,000 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் வழங்கினார்.
தேடி அழைக்கும்
மாணவ, மாணவிகள் தங்கள் அறிவுத்திறமைகளை படிக்கும்பொழுதே வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்லூரி படிப்பு உலகில் என்ன நடக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளவும், உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் ஏதுவாக அமைகிறது. உங்கள் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டால், தனியார் நிறுவனங்கள் உங்களை தேடி அழைத்துக் கொள்ளும். தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் திகழ்ந்தாலும், அதிக அளவில் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ மாணவிகள் இம்மாவட்டத்தில் உள்ளனர் என்பதை கூறிக்கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இவர்கள் அனைவரும் தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொண்டு, வேலைவாய்ப்பினை பெற்று, சமுதாயத்தில் நல்ல நிலையை அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என கலெக்டர் .இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.
பலர் பங்கேற்பு
இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன், மாவட்ட திட்ட இயக்குநர் (தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்) சுந்தரராஜன், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான், ஸ்ரீ ரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஸ்ரீபதி, தலைவர் ரங்கபூபதி, உதவி திட்ட அலுவலர் கமல்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்