முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகேஷுக்கு ஜாமீன் தரலைன்னா பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் : பெண் நீதிபதிக்கு மர்ம நபர் மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  -  தினகரனின் புரோக்கர் சுகேஷூக்கு ஜாமீன் வழங்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டெல்லி பெண் நீதிபதி பூனம் சௌதரிக்கு மர்ம நபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்த தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் முடக்கிய இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவதாக டிடிவி தினகரனிடம் பணம் பெற்றதாக டெல்லி இடைத்தரகர் சுகேஷை போலீஸார் கடந்த மாதம் 17-ஆம் தேதி கைது செய்தனர். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரனையும் போலீஸார் கடந்த 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
மேலும் தினகரனின் பணப்பரிவர்த்தனை விஷயங்களை கவனித்து வந்த அவரது நண்பர் மல்லிகார்ஜுனனும் கைது செய்யப்பட்டார். தினகரன், மல்லியை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சென்னையில் விசாரண
அடுத்து இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்த டெல்லி போலீஸார் தினகரன் அடிக்கடி செல்லும் இடங்களில் விசாரணை நடத்தினர். மேலும் ஆதம்பாக்கம், கொளப்பாக்கம், திருவேற்காடு, பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தி 16 பேருக்கு சம்மன் அளித்தனர்.

நீதிமன்றக் காவல்
சிறையில் உள்ள டிடிவி தினகரனின் நீதிமன்றக் காவல் மே 15-ஆம் தேதியும், சுகேஷின் நீதிமன்றக் காவல் மே 12-ஆம் தேதியும் முடிவடைகிறது. முன்னதாக கடந்த 28-ஆம் தேதி சுகேஷ் சந்திராவை நீதிபதி பூனம் சௌதரி முன்பு போலீஸார் ஆஜர்படுத்தியபோது நீதிபதிக்கு மிரட்டல்கள் வந்த விவகாரம் தற்போது வெளியாகியுள்ளன.

 பரபரப்பு தகவல்கள்
சுகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிபதி பூனம் சௌதரிக்கு வந்த தொலைபேசியில் மறுமுனையில் பேசிய அந்த நபர் தன்னை உச்சநீதி்மன்ற தனிச் செயலாளர் அனுமந்த் பிரசாத் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் சுகேஷுக்கு நீதிமன்றக் காவல் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு நீதிபதி மறுக்கவே, ஜாமீன் வழங்காவிட்டால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்து போனை துண்டித்துவிட்டார்.

நீதிபதிகளிடம் விசாரணை
இதைத் தொடர்ந்து சுகேஷுக்கு 11 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு கால்களை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த மர்ம நபர் குறிப்பிட்ட அந்த பெயரில் யாரும் இல்லை என்று தகவல் கிடைத்ததை அடுத்து தீஸ் ஹசாரி குற்றவியல் தலைமை நீதிபதியிடம் புகார் அளித்தார். அவரது ஆலோசனையின் பேரில் டெல்லி போலீஸாரிடம் பெண் நீதிபதி புகார் அளித்துள்ளார்.

மிரட்டல் விடுத்தது யார்?
சுகேஷை ஜாமீனில் வெளிவிட வில்லை என்றால் பல முக்கிய தகவல்கள் அவரது வாயிலாக கசிய நேரிடும் என்ற பயத்தின் காரணமாக யாரோ மிரட்டல் விடுத்துள்ளனர். சுகேஷுக்கு இந்தியா முழுவதும் கூட்டாளிகள் உள்ளனர். மேலும் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.20 கோடியை சுகேஷ் மோசடி செய்துள்ளார். எனவே சுகேஷ் ஏதேனும் உண்மையை கூறினால் அது தங்களுக்கு ஆபத்து என்பதால் இதுபோன்று மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்