முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை  - மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது. தங்கக் குதிரை வாகனத்தில்  பட்டுஉடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

சித்திரை திருவிழா
மதுரையில் முத்திரை பதிக்கும் விழாக்களில் சித்ரா பெளர்ணமி நாளில் நடைபெறும்  கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமே  பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கடந்த பத்து நாட்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் சித்திரை திருவிழாவில் உச்சகட்டமாக கள்ளழகர் என்று அழைக்கப்படுகின்ற சுந்தராஜ பெருமாள் வைகையாற்றில் இறங்கும்   வைபவமே சிறப்பானதாகும்.

மதுரைக்கு புறப்பட்டார்
அதன்படி மீனாட்சி அம்மன் கோவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 7-ம் தேதியும்,  தேரோட்டம் மறுநாளும் சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து அழகர் மதுரைக்கு எழுந்தருளும் திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அழகர் கோயிலிலிருந்து தோளுக்கினியான் என்கிற சுந்தராஜபெருமாள் கள்ளர் திருக்கோலத்தில் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். வழியில் உள்ள பொய்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தராஜன்பட்டி, ஆகிய இடங்களில் தங்கி நேற்று  அதிகாலை 2.30 மணிக்கு மதுரை நகருக்கு எழுந்தருளினார். வழி நெடுகிலும் அமைக்கப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட திருக்கண் மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவிலும் கிராம மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

மூன்று மாவடியில் அழகர்
நேற்றுக்காலை 6 மணிக்கு நகர எல்லையான மூன்று மாவடிக்கு கள்ளழகர் வருகை தந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்கொண்டு (எதிர்சேவை) கள்ளழகரை வரவேற்றனர். பக்தர்கள், செம்புகளில் சர்க்கரை, இனிப்புகளை நிரப்பி தீபாராதனை காட்டினர். அப்போது கோவிந்தா, கோவிந்தா என பக்திபரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகர் புதூர் வழியாக அவுட் போஸ்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து நேற்று மாலை 5 மணிக்கு அழகர் புறப்பட்டு அம்பலக்கார மண்டபத்துக்கு வந்தார். பின்னர் இரவு 9.30 மணிக்கு  தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்குள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு திருமஞ்சனமாகி, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.

இன்று ஆற்றில் இறங்குகிறார்
பின்னர்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை அணிந்து கொண்டு இரவு 12 மணிக்கு  தமுக்கம் கருப்பணசுவாமி கோயிலுக்கு வந்தார். அங்கு ஆயிரம் பொன் சப்பரம் நிகழ்ச்சி நடைபெற்றது. வழிநெடுக மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் இன்று காலை 6.15 மணிக்கு வைகை ஆற்றில் இறங்குகிறார்.

உள்ளூர் விடுமுறை
இந்நிகழ்ச்சியைக் காண வைகை ஆற்றில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருளுகிறார்கள். இதனையொட்டி ப க்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அழகரை வரவேற்பதற்காக  கள்ளழகர் வேடமிட்ட 100-க்கணக்கான  பக்தர்கள் மதுரை வந்துள்ளனர். இவர்கள் அனைவருமே  நேர்த்திக்கடன் நேர்ந்தவர்கள். இவர்கள் யாவரும் வைகை ஆற்றில் தண்ணீர் பிடித்து அதனை பீச்சி, பைமூலம்  தண்ணீரை தெளித்து கோடையின் வெயிலை தணிப்பதோடு, தங்களது நேர்த்திக்கடனையும் நிறைவேற்றுவார்கள். கள்ளழகர் வைகை ஆற்றில் இரங்குவதையொட்டி இன்று  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாட்டுக்களுக்காக  2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆற்றில் இறங்கிய பிறகு அழகர் வண்டியூர் செல்வார். அங்கு வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். நாளை சேஷ வாகனத்தில் வீதி உலா வரும் அழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பார். பிறகு தசாவதாரம் நடைபெறும். மறுநாள் அழகர் அழகர்கோவிலுக்கு புறப்பட்டுச் செல்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago