முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்மாதிரி இளைஞர்கள் புதிய ஆழ்துளை குடிநீர் கிணறு அமைத்திட பூமிபூஜை நடத்தினர்

செவ்வாய்க்கிழமை, 9 மே 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்-
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தங்களது கிராமத்தில் நிலவிடும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் ஒன்றிணைந்து களமிறங்கிய முன்மாதிரி இளைஞர்கள் ஒன்றரை லட்சம் செலவில் ஆழ்துளை குடிநீர் கிணறு அமைத்திடுவதற்காக பூமிபூஜை நடத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னஉலகாணி கிராமம்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்திடும் இந்த கிராமத்தில் தற்போது வறட்சி காரணமாக குடிநீர் பஞ்சம் ஆரம்பித்துள்ளது.நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் வற்றியதால் சின்னஉலகாணி பகுதி மக்கள் குடிநீர் தேடி அலைந்திடும் நிலை காணப்படுகிறது.தங்களது கிராமத்து மக்கள் குடிநீருக்காக சிரமப்படுவதை நேரில் கண்ட சின்னஉலகாணி கிராமத்து இளைஞர்கள் உதவும் கரங்கள் நற்பணி இயக்கம் என்ற பெயரில் ஒன்றிணைந்தனர். இதையடுத்து இந்த இயக்கத்தின் தலைவராக எஸ்.கண்ணன்,செயலாளராக பி.முனியாண்டி,பொருளாளராக வேல்முருகன் மற்றும் நிர்வாகிகளாக பாபு,காமராஜ்,பாலமுருகன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உதவும் கரங்கள் நற்பணி இயக்கத்தினால் ஒன்றிணைந்த சின்னஉலகாணி கிராமத்து இளைஞர்கள் தங்களிமிருந்த பணம் மற்றும் நல்லஉள்ளங்கள் சிலரிடம் வசூல் செய்து சுமார் ஒன்றரை லட்சம் செலவில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து அதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை அங்குள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நிறைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட முடிவு செய்தனர்.அதன்படி தாங்கள் சிரமப்பட்டு சேர்த்திருக்கும் பணத்தை கொண்டு ஆழ்துளை குடிநீர் கிணறு அமைத்திட ஊர் பெரியவர்களுடன் இணைந்து இளைஞர்கள் பூமிபூஜை நடத்தினார்கள்.வீணான காரியங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் சின்னஉலகாணி கிராமத்திலுள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்களது கிராமத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்கிட ஒன்றிணைந்து ஒன்றரை லட்சம் செலவில் ஆழ்துளை குடிநீர் கிணறு அமைத்திட பூமிபூஜை நடத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும்,பாராட்டையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து உதவும் கரங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் எஸ்.கண்ணன் கூறுகையில்: எங்களுடைய கிராமத்து மக்கள் குடிநீருக்காக சிரமப்படக்கூடாது என்பதற்காக இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.எங்கள் இயக்கத்தின் சார்பில் மக்களுக்கான எங்கள் பணி என்றும் தொடர்ந்து நடைபெற்றிடும் என்று தெரிவித்தார்.இதனிடையே சின்ன உலகாணி கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு இயக்கமான சோலைவனத் தென்றல் நண்பர்கள் சார்பில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிடும் நிகழ்வினை முன்னிட்டு கிராமத்திலுள்ள மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கிடும் நிகழச்சியும் நேற்று சிறப்புடன் நடைபெற்றது.மொத்தத்தில் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள சின்னஉலகாணி கிராமம் ஒற்றுமைமிகு இளைஞர்களின் முன்மாதிரி நடவடிக்கைகளால் முன்னேறிச் சென்றிடும் காலம் வெகு தொலைவில் இல்லை....

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்