முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 34 ஏரிகளை புனரமைக்கும் குடிமராமத்து பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும்: கலெக்டர் சி.அ.ராமன் செய்தியாளர் பயணத்தில் தகவல்

புதன்கிழமை, 10 மே 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் வாலாஜா வட்டம், மேலகுப்பம் கிராமத்தில் உள்ள திம்மனாச்சாரிகுப்பம் ஏரி மற்றும் நந்தியாலம் கிராமத்தில் உள்ள நந்தியாலம் ஏரிகளில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப்பணிகளை கலெக்டர் சி.அ.ராமன், பார்வையிட்டு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பணிகள்

வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மேலகுப்பம் கிராமத்தில் உள்ள திம்மனாச்சாரிகுப்பம் ஏரியினை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் திம்மனாச்சாரிகுப்பம் ஏரியின் கரை மற்றும் 20.44 ஹெக்டேர் நீர்பிடிப்பு பரப்பில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், ஏரியின் கரை 976 மீ பலப்படுத்துதல், வரத்துக்கால்வாயில் 3000 மீட்டர் முதல் 5500 மீட்;டர் வரை தூர் வாரி செப்பனிடுதல், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியின் எல்லைகற்கள் நடுதல் மேலும் கலங்களில் ஏப்ரான்களின் உள்ள சேதங்களை சீர் செய்தும், தடுப்பு சுவர் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 47.43 ஹெக்டர் பாசன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதே போன்று வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், நந்தியாலம் கிராமத்தில் உள்ள நந்தியாலம் ஏரியினை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.இத்திட்டத்தின் கீழ் நந்தியாலம் ஏரியின் கரை, மற்றும் 78.685 ஹெக்டேர் நீர்பிடிப்பு பரப்பில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், ஏரியின் கரை 1312 மீ நீளத்திற்கு பலப்படுத்துதல், வரத்துக்கால்வாயில் டுளு 2700 மீ முதல் டுளு 4500 மீ வரை தூர் வாரி செப்பனிடுதல், ஏரியின் நீர் பிடிப்பு பகுதியின் எல்லைகற்கள் நடுதல் மேலும் கலங்களில் ஏப்ரான்களின் உள்ள சேதங்களை சீர்செய்தும், தடுப்பு சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 147.37 ஹெக்டர் பாசன அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்று நீர்வள ஆதாரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு அவர்கள் கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார்.

 

கலெக்டர் பேட்டி

இந்த செய்தியாளர் பயணத்தில் கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து அவற்றை மேம்படுத்தும் உயரிய நோக்கத்தோடு மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வழக்காட்டுதலின்படி கடந்த 2016-17 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகளோடு இணைந்து அவர்களின் பங்களிப்போடு நீர்நிலைகளை புனரமைத்து, விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே அரசின் நோக்கமாகும்.

இத்திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக 21.01.2017ன் வாயிலாக நடப்பாண்டில் (2016-17) தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.100.00 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 34 ஏரிகளை புனரமைக்க ரூ.300.00 இலட்சத்திற்கு அனுமதி வழங்கப்ட்டு அனைத்து பணிகளும் துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் 34 ஏரிகளிலும ஏரிக்கரை மற்றும் நீர்பரப்பு பகுதிகளில் காணப்படும் புதர்களை அகற்றுதல், ஏரிக்கரையில் அரிப்பினால் ஏற்பட்டுள்ள பள்ளங்களை நிரப்பி கரையினை பலப்படுத்துதல், அனைத்து ஏரிகளில் நீர்வரத்து கால்வாய் மொத்தம் 16 கிலோமீட்டர் தூரம் தூர்வாருதல் மற்றும் புதர்களை அகற்றுதல, எல்லைக்கற்கள் நடுதல் போன்ற புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.குடிமராமத்து திட்டத்தின் மூலம் 2016-17 ஆம் நிதியாண்டில் வேலூர் மாவட்டத்தில் 34 ஏரிகள் புனரமைப்பு செய்யப்படுவதினால் மொத்தம் பாசனம் பெறும் 2248 ஹெக்டேர் நிலங்கள் பாசன உறுதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் உணவு உற்பத்தி மற்றும் இந்த ஏரிகளின் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை அரக்கோணம் பையனூர் ஏரியில் குடிமராமத்து பணிகள் நிறைவடைந்துள்ளது. மற்ற அனைத்து ஏரிகளின் குடிமராமத்து புனரமைப்பு பணிகளும் வரும் ஜீன் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்றும்

மேலும் வரும் 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.300.00 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் இரண்டாவது கட்டமாக இத்திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 55 ஏரிகள் ரூ.10.00 கோடியில் புனரமைப்பு செய்யப்படுவதினால் பாசனம் பெறும் 5187 ஹெக்டர் நிலங்கள் பாசன உறுதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நீர் இல்லாத ஏரிகள் பொதுப்பணித்துறையினால் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு இலவசமாக அனுமதி வழங்க தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரிகளில் இருந்து வண்டல் மண் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் இயந்திரங்களை கொண்டு சேகரிக்கப்பட்டு 1 யூனிட் மண் ரூ.35.2 ற்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் 1 ஹெக்டர் நன்செய் நிலம் வைத்துள்ள விவசாயிகள் 12.5 லோடு வண்டல் மண்ணும் 1 ஹெக்டர் புன்செய் நிலம் வைத்துள்ள விவசாயிகள் 15.5 லோடு வண்டல் மண்ணும் எடுத்துக் கொள்ளலாம். இவை நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கலெக்டர் சி.அ.ராமன், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் செயற் பொறியாளர் அன்பரசு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, கோட்டப் பொறியாளர் கார்த்திக், இளநிலை பொறியாளர் ராகவேந்திரன், வட்டாட்சியர் ப்ரியா மற்றும் அலுவலர்கள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்