முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேந்தமங்கலம் வட்டத்திற்குட்பட்ட, துத்திக்குளம் ஏரியில் விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்டம்: அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 13 மே 2017      நாமக்கல்
Image Unavailable

 

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள ஏரி குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை வேளாண் நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், துத்திக்குளம் கிராமம், பொம்மசமுத்திரம் ஏரியில் விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் வழங்கும் பணி துவக்க நிகழ்ச்சி நேற்று (13.05.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் , சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சி.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

வண்டல் மண்

ஏரி குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை வேளாண் நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தின் கீழ் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகளுக்கு நஞ்சை நிலமாக இருந்தால் ஏக்கர் ஒன்றிற்கு 25 டிராக்டர் லோடுகளுக்கு மிகாமலும், புஞ்சை நிலமாக இருந்தால் ஏக்கர் ஒன்றிற்கு 30 டிராக்டர் லோடுகளுக்கு மிகாமலும் வண்டல் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 10 ஏரிகளில் 43,650 கனமீட்டர் அளவுள்ள 14,500க்கும் மேற்பட்ட டிராக்டர் அளவு வண்டல் மண் எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கும் திட்டத்தினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி துவக்கி வைத்து இலவசமாக மண் எடுப்பதற்கான ஆணையினை முதற்கட்டமாக 5 விவசாயிகளுக்கு வழங்கினார்.

முன்னதாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முத்துக்காப்பட்டி ஊராட்சி, புதுக்குளம் ஏரி பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறையின் சார்பில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரை பலப்படுத்துதல் மற்றும் ஏரி வழிந்தோடி, மதகுகள் மேம்படுத்துதல், வரத்து வாய்க்கால் தூர் வாரும் பணி உள்ளிட்ட குடிமராமத்துப்பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்து பணிகளையும், விரைவாகவும், தரமாகவும், குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநர் (கனிம வளத்துறை) ஆர்.ஜெயந்தி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ம.ராஜசேகரன், சேந்தமங்கலம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணி, பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி, உதவிப்பொறியாளர்கள் எ.சதீஸ்குமார், பழனிவேல், சேலம் - நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த ஆவின் தலைவர் ஆர்.சின்னுசாமி, அரசு வழங்கறிஞர் தனசேகரன், கூட்டுறவாளர் சேந்தமங்கலம் வருதராஜ், உட்பட முன்னால் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்