முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். ராணுவம் தொடர்ந்து 4-வது நாளாக அத்துமீறல்: இந்திய ராணுவம் தக்க பதிலடி

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு : பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து நேற்று 4-வது நாளாகவும் எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவ தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜம்மு பகுதியில் இருக்கும் நவ்ஷெரா மாவட்டத்தையொட்டியுள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து நேற்று 4-வது நாளாக இந்திய எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் கிராமப்புறங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினர் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 82எம்எம்.120 எம்எம் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் இந்திய பகுதியில் உள்ள கிராமங்களில் இருக்கும் கட்டிடங்கள் பல சேதம் அடைந்துள்ளன. எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகில் இருக்கும் இந்திய கிராமங்களில் வசிக்கும் 1000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கிடைக்க ஜம்மு நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் நவஷெரா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 ஆயிரம் மாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் இடத்தை மாற்றி நேற்றுக்காலையில் ராஜோரி மாவட்டத்தில் உள்ள சிதிபக்ரி, சிங்குல், மஞ்சகோதே ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த பகுதிகளிலும் இந்திய ராணுவத்தினர் உஷாராக இருந்து தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாதான் போர்நிறுத்த மீறலில் ஈடுபட்டு வருகிறது என்று பாகிஸ்தான் பொய் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதரை அழைத்து கண்டனத்தை பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் 268 தடவை போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்