முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்நிலைகளை சொந்த செலவில் சீரமைக்க சொல்லி தி.மு.க மேலிடம் உத்தரவு உற்சாகம் இழந்து உடன்பிறப்புகள் தவிப்பு!!

ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-வறட்சியை காரணமாக வைத்து பொதுமக்களிடையே நற்பெயர் வாங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளுரிலுள்ள நீர்நிலைகளை தூர்வாரி சீரமைத்திட தி.மு.க மேலிடம் உத்தரவிட்டிருப்பது அக்கட்சியின் உடன்பிறப்புகளை உற்சாகம் இழந்து தவித்திடும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

தற்போது கோடைகாலம் தொடங்கி கத்திரி வெயில் தமிழகமெங்கிலும் வாட்டி வதைத்து வரும் நிலையில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.இதனிடையே வறட்சியை சமாளித்திட நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள்,புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வசதி செய்து கொடுத்தல்,மானிய விலையில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குதல்,வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குதல் என தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தமிழக அரசின் இந்த போர்க்கால நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எதிர்கட்சியான தி.மு.க.விற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வறட்சியை காரணமாக வைத்து பொதுமக்களிடையே நற்பெயர் வாங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளுரிலுள்ள நீர்நிலைகளை உடன்பிறப்புகள் தங்களது சொந்த பணத்தில் தூர்வாரி கட்சியின் செல்வாக்கினை வளர்த்திட வேண்டும் என்று தி.மு.க மேலிடம் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவை செயல்படுத்திடும் வகையில் தமிழகம் முழுவதிலும் மாவட்ட,ஒன்றிய,நகர தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.இதில் கலந்து கொண்ட உடன்பிறப்புகளில் பெரும்பாலானோர் கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை ஆட்சியில் தி.மு.க இல்லாததால் தாங்கள் கைச்செலவுக்கு கூட பணமின்றி தவித்து வருவதாகவும்,இந்த சூழ்நிலையில் தொண்டர்களின் தவிப்பினை உணர முடியாத கட்சி மேலிடம்,தூர்வாரும் பணிகள் செய்திட தங்களை கட்டாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வியெழுப்பி நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோடைமழை பெய்யத் தொடங்கியிருப்பது தி.மு.க.வினரை உற்சாகமடையச் செய்துள்ளது. அதற்கு காரணம் கைகாசை செலவு செய்து நீர்நிலைகளை தூர்வாரி சீரமைப்பு செய்வதற்கு முன்பாக மழைபெய்து நீர்நிலைகள் நிரம்பத் துவங்கியிருப்பது தான்.ஆட்சியில் இல்லாத நேரத்தில் இது போன்ற செலவு வைக்கக்கூடிய வேலைகளை தங்கள் தலையில் சுமத்த வேண்டாம் என்றும் பணத்தை கோடிகோடியாக சேர்த்து வைத்திருக்கும் வி.வி.ஐ.பி.,தலைவர்களிடம் இது போன்ற பணிகளை செயல்தலைவர் ஸ்டாலின் ஒப்படைத்தால் நன்றாயிருக்கும் எனவும் உடன்பிறப்புகள் மேலிடத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.எல்லாம் ஒரு விளம்பரத்திற்கு தான் என்றாலும் கையில் பசையின்றி தவித்து வரும் உடன்பிறப்புகளை கசக்கிபிழிவது எந்த விதத்தில் நியாயம்?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்